கம்போங் தெலுக் ஜாவாவில் தீ விபத்து: 30 வீடுகள் முற்றாக எரிந்து சேதம்

top-news

பாசிர் கூடாங், பிப். 12-

மாசாய் அருகே உள்ள கம்போங் தெலுக் ஜாவாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் தண்ணீர்மேல் அமைந்திருந்த 30 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசமாயின. வீடுகள் மட்டுமின்றி, சம்பவத்தில் இரண்டு இயந்திரப் படகுகள், ஒரு கார் மற்றும் ஆறு மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாகி சேதமடைந்தன.

இருப்பினும், அனைத்து குடியிருப்பாளர்களும் உடனடியாக வெளியேறி தங்களைப் பாதுகாத்துக் கொண்டதால், உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை. தீ பரவிய வேகம் அதிகமாக இருந்ததால், சிலர் அண்டை வீட்டாரின் உதவியுடன் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்  மூத்த தீயணைப்பு அதிகாரி முகமது சுப்ரி முகமது இசா கூறுகையில், காலை 7.04 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, பாசிர் கூடாங் மற்றும் ஜொகூர் ஜெயா நிலையங்களிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களும் 28 பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் என்றார்.

தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் மற்றும் மொத்த சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *