20.74 மில்லியன் மதிப்புள்ள 409.4 கிலோ போதைப்பொருள் பறிமுதல்! இருவர் கைது

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஆக 4: சிலாங்கூரில், மொத்தம் 20.74 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 409.4 கிலோ மெத்தாம்பெத்தமைன் மற்றும் 900 எம்.டி.எம்.ஏ கலக்கப்பட்ட வேப் கார்ட்ரிட்ஜ்களைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை முடக்கியுள்ளது.

'ஆபரேஷன் காளிதாசா'வின் கீழ் ஜூலை 29 அன்று நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில், 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு உள்ளூர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.

முதல் சோதனை, சுங்கை பூலோவில் உள்ள ஜாலான் கோலா சிலாங்கூர் சாலையில், முகிம் இஜோக், பத்து 22 என்ற இடத்தில் நடத்தப்பட்டது என்று அவர் இன்று இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

போதைப்பொருள் இருப்பதாக நம்பப்படும் மூட்டைகளை இரண்டு புரோட்டான் X70 வாகனங்களில் இறக்கிக் கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர்கள் இருவரையும் காவல்துறை பிடித்ததாக அவர் கூறினார்.

அந்தப் போதைப்பொருள் முன்னதாக, ஒரு கோயிலுக்கு அருகிலுள்ள புதர் நிறைந்த பகுதியில் விடப்பட்டிருந்தது; அந்த இடம் ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது  என்று அவர் கூறினார்.

அந்தப் போதைப்பொருள் கோயில் வளாகத்திற்குள் மறைத்து வைக்கப்படவில்லை என்றும், அருகிலுள்ள புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஹுசைன் தெளிவுபடுத்தினார்.

இதனை அடுத்து மெத்தாம்பெத்தமைன் என்று நம்பப்படும் படிகத் துண்டுகள் மற்றும் தூள் அடங்கிய 409 பொட்டலங்களைக் கொண்ட 21 வெள்ளை நிற பிளாஸ்டிக் மூட்டைகளை காவல்துறை கைப்பற்றியதாக அவர் கூறினார்.

 மெத்தாம்பெத்தமைனின் மொத்த எடை 409.4 கிலோ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாமான் புத்ரா டாமாய் பகுதியில், போதைப்பொருள் பதுங்குகுழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு வாடகை வீட்டில் தொடர் சோதனை நடத்தப்பட்டது  என்று அவர் கூறினார். மேலும், MDMA என நம்பப்படும் சுமார் 1.8 லிட்டர் திரவம் அடங்கிய 900 வேப் கார்ட்ரிட்ஜ்களை காவல்துறை பறிமுதல் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் அந்தக் கும்பலுக்கு, அந்த இரு நபர்களும் கடத்தல்காரர்களாகச் செயல்பட்டதாக ஹுசைன் கூறினார்.

இந்த போதைப்பொருட்கள் 2.04 மில்லியன் பயனர்களுக்கு விநியோகிக்கும் திறன் கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

பல போதைப்பொருள் கும்பல்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும், போதைப்பொருட்களைக் கொண்டு செல்லவும் விநியோகிக்கவும் தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடி வருவதாகவும் ஹுசைன் கூறினார்.

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த தகவல்களைக் கொண்ட பொதுமக்கள், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் ஹாட்லைன் எண்ணான 012-208 7222-ஐத் தொடர்பு கொள்ளலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *