மலேசியாவுக்கு 50 'ஸ்டார் லிங்க்' கருவிகள்! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வழங்கியது!
- Shan Siva
- 01 Oct, 2026
கோலாலம்பூர், அக் 1: மலேசியாவின் பேரிடர் தயார்நிலை முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'ஸ்பேஸ்எக்ஸ்' (SpaceX) நேற்று 50 'ஸ்டார்லிங்க்' (Starlink) கருவிகளை வழங்கியது.
புத்ராஜயாவில் தன்னைச் சந்தித்த ஸ்பேஸ்எக்ஸ் பிரதிநிதிகள் குழுவினர் இந்தக் கருவிகளை வழங்கியதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இச்சந்திப்பில் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலும் கலந்துகொண்டார்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கான இணையச் சேவையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட, அந்நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணையச் சேவையான 'ஸ்டார்லிங்க்' மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக அன்வார் கூறினார்.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் கிராமப்புறங்கள் மற்றும் தீபகற்ப மலேசியாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகள் உட்பட, இணையச் சேவையின் வரம்பை விரிவுபடுத்தவும் அதன் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஸ்டார்லிங்க் அளிக்கும் ஆதரவை தாம் பாராட்டுவதாக அவர் கூறினார்.
உள்ளூர் தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், பயனர்களுக்கான சேவையின் தரத்தை மேம்படுத்தவும் சைபர்ஜெயாவில் (Cyberjaya) ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு செயல்பாடுகளைத் தொடங்குவதையும் தாம் வரவேற்பதாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மக்களுக்கு உறுதியான பலன்களைத் தர வேண்டும் என்றும், அதே வேளையில் இணையச் சேவை விரிவடையும்போது இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இணையப் பயன்பாடு ஆகியவை முன்னுரிமை பெற வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
நாட்டின் முன்னேற்றத்தில் கிராமப்புறச் சமூகங்கள் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களும் தரமான மற்றும் பாதுகாப்பான இணையச் சேவையைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

