விண்வெளியில் இருந்து கண்டறியப்பட்ட இயற்கை பேரிடரான 650 அடி உயர சுனாமி அலை!
- Muthu Kumar
- 29 Dec, 2025
உலகம் முழுவதும் உள்ள நில அதிர்வு ஆய்வகங்கள் திடீரென ஒரு வினோதமான சிக்னலை உள்வாங்கின. பொதுவாக நிலநடுக்கம் ஏற்பட்டால் கிறுக்கல்களைப் போலப் பதிவாகும் வரைபடங்கள், அன்று ஒரு சீரான தாளத்துடன் (Rhythm) பதிவாகின.
92 வினாடிகளுக்கு ஒருமுறை 'டக்... டக்...' என பூமியின் இதயத் துடிப்புபோல இந்த சிக்னல் அலாஸ்கா முதல் ஆஸ்திரேலியா வரை பதிவானது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த மர்மத் துடிப்பு 1 மணி நேரம், 2 மணி நேரம் அல்ல,தொடர்ந்து 9 நாட்கள் நீடித்தது.
விஞ்ஞானிகள் தீவிர தேடுதலில் இறங்கியபோது, விடை கிரீன்லாந்தின் டிக்சன் ஃஜோர்டு என்ற குறுகிய கடற்பகுதியில் கிடைத்தது. அங்கே 3,000 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட மலைச் சிகரம், புவி வெப்பமயமாதலால் தனது பிடியை இழந்து சரிந்து விழுந்தது. சுமார் 10,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுள்ள (2.5 கோடி கன மீட்டர்) பாறைகளும் பனிக்கட்டிகளும் கடலில் விழுந்தன. இதனால் எழும்பிய அலையின் உயரம் எவ்வளவு தெரியுமா? 650 அடி. அதாவது பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் உயரத்தில் பாதிக்கும் மேல் இருக்கும்.
குறுகிய மலை இடுக்கிற்குள் இந்த ராட்சத அலைகள் புகுந்ததால், வெளியேற முடியாமல் இருபுறமும் உள்ள மலைச் சுவர்களில் மோதி அலை பாய்ந்தன. ஒரு பாத்திரத்தில் உள்ள நீரை ஆட்டினால் எப்படி இருக்குமோ, அதுபோல ஒன்பது நாட்களுக்கு நீர் அங்குமிங்கும் மோதிக்கொண்டே இருந்தது.
இந்த நீரின் தொடர்ச்சியான மோதல், கடல் தரையை ஒரு ராட்சத 'பிஸ்டன்' போல அழுத்தியது. அந்த அழுத்தம் பூமிக்கடியில் ஊடுருவி, ஒட்டுமொத்த கோளையும் ஒன்பது நாட்களுக்கு அதிரச் செய்தது. இதைத்தான் உலகெங்கிலும் உள்ள கருவிகள் பதிவு செய்தன. முன்பு இந்தப் பாறைகளை இரும்புக் கரம் போலத் தாங்கிப் பிடித்திருந்த பனிப்பாறைகள், வெப்பத்தால் உருகியதே இந்த நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம். இயற்கை தனது விதிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
70-க்கும் மேற்பட்ட சர்வதேச விஞ்ஞானிகள் இணைந்து, புதிய SWOT செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி இந்த மர்மத்தை உடைத்து உள்ளனர். இனி வரும் காலங்களில், இது போன்ற ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்க இந்த ஆய்வு ஒரு மைல்கல்லாக இருக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



