கெடாவில் வெள்ள அபாயத்தில் 90 பகுதிகள்!

top-news

கோலாலம்பூர், அக் 27: 2026-2027ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, கெடா மாநிலத்தில் வெள்ள அபாயம் உள்ள 90 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக, கெடா ஆறு மற்றும் மூடா ஆற்றுப் படுகைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகமாக இருப்பதாக கெடா மாநில சிவில் தற்காப்புப் படையின் இயக்குநர், லெப்டினன்ட் கர்னல் முகமட் புகோரி மாட் சிடிக் தெரிவித்துள்ளார்.

கெடா ஆற்றுப் படுகையைப் பொறுத்தவரை, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பெண்டாங் மற்றும் போக்கோக் சேனா ஆகிய மாவட்டங்கள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூடா ஆற்றுப் படுகையில் கோலா மூடா, பாலிங், சிக் மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்கள் அபாயப் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெள்ளத்தை எதிர்கொள்ள மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கீழ் செயல்படும் சிவில் தற்காப்புப் படை உள்ளிட்ட மீட்பு அமைப்புகள் முழு தயார் நிலையில் இருப்பதாக முகமட் புகோரி கூறினார். மொத்தம் 4,585 பணியாளர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் கணிப்பின்படி, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27ஆம் தேதி இன்று தொடங்கி, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழையின் தொடக்கக் காலத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து பெய்யும் கனமழை மூன்று முதல் ஐந்து முறை ஏற்படக்கூடும். இதனால் ஆற்றங்கரைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி வரையிலான ஏழு நாள் வானிலை முன்னறிவிப்பின்படி, இந்தக் காலகட்டம் முழுவதும் நாட்டில் கிழக்குத் திசைக் காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மலேசிய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளின் எச்சரிக்கைகளைப் பின்பற்றுவதுடன், வெள்ள நிலவரம் குறித்த அண்மைத் தகவல்களையும் தொடர்ந்து அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்