அப்துல் அசீஸ் அப்துல் மஜீட் புதிய துணை காவல் துறைத் தலைவராக நியமனம்
- Surendran Sumdraraj
- 14 Sep, 2026
கோலாலம்பூர், செப். 14 –
புக்கிட் அமான் மேலாண்மைத் துறை இயக்குநராக பணியாற்றி வந்த டத்தோ ஸ்ரீ அப்துல் அசீஸ் அப்துல் மஜீட், மலேசியாவின் புதிய துணை காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் கட்டாய ஓய்வு பெற்ற டான் ஸ்ரீ அயோப் கான் மைதின் பிச்சையின் இடத்தை அப்துல் அசீஸ் நிரப்புகிறார்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூஷன் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையின்படி, காவல் படை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பிரதமரின் ஆலோசனையுடன் மாமன்னர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த நியமனம் கூட்டாட்சி அரசியலமைப்பின் 140-ஆவது பிரிவின் 4 மற்றும் 5-ஆவது உட்பிரிவுகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 வயதான அப்துல் அசீஸ், பினாங்கு மாநிலத்தின் பெனாகாவைச் சேர்ந்தவர். மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் காவல்துறை ஆய்வில் சமூக அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், 1995 ஜூலை 1-ஆம் தேதி மலேசிய காவல் துறையில் இணைந்தார்.
தனது நீண்டகால பணிச் சேவையில் மேலாண்மைத் துறை இயக்குநர், சிறப்புப் பிரிவு துணை இயக்குநர், போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துணை இயக்குநர் மற்றும் பினாங்கு துணை காவல் துறைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

