ரேணுகாசாமி கொலை வழக்கு – முக்கிய சாட்சிகள் விசாரணைக்கு மட்டும் தர்ஷன் நேரில் ஆஜராக அனுமதி

top-news
FREE WEBSITE AD

பெங்களூரு, செப். 11 –

ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் நாட்களில் மட்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு பெங்களூரு 59-ஆவது சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் விசாரணையில் உள்ளது.

சாட்சிகளிடம் நடைபெறும் விசாரணையை நேரில் காண அனுமதி கோரி தர்ஷன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவர் காணொலி காட்சி மூலமாகவே ஆஜராக வேண்டும் என்று கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தர்ஷன் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். விசாரணையின் போது, நேரில் ஆஜராகும் வாய்ப்பு கிடைத்தால் தனது வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடவும், சாட்சிகளின் வாக்குமூலங்களை தெளிவாக புரிந்துகொள்ளவும் முடியும் என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், தர்ஷனை காண ரசிகர்கள் நீதிமன்றத்திற்கு அதிகளவில் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீசானந்தா, முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்படும் நாட்களில் மட்டும் தர்ஷன் நேரில் ஆஜராகலாம் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செசன்ஸ் கோர்ட்டு பதிவாளர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *