PN உயர்மட்ட கூட்ட தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை – தக்யூடின்
- Tamil Malar (Reporter)
- 09 Feb, 2026
கோத்தா பாரு, பிப். 9-
தான் ஸ்ரீ முஹ்யிதீன் யாசின் பதவிக்கு மாற்றாகப் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பெரிகாத்தான் நேஷனல் (PN) உயர்மட்ட மன்றக் கூட்டத்தின் தேதி, கூட்டணியில் உள்ள நான்கு உறுப்பு கட்சிகளின் தலைவர்களிடையே ஒற்றுமையான உடன்பாடு ஏற்பட்ட பிறகே இறுதி செய்ய முடியும் என்று பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்யூடின் ஹாசான் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், PN தலைமைக்குள் உள்ள அனைத்து கட்சி தலைவர்களின் சம்மதத்தைப் பொறுத்தே கூட்டத் தேதி நிர்ணயிக்கப்படும் என்பதால், தற்போது வரை எந்தத் தேதியும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.
“இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை. PN-இல் உள்ள நான்கு கட்சிகளின் அனைத்து தலைவர்களையும் நாங்கள் சார்ந்திருக்கிறோம்.
“ஒரே ஒரு தேதியில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில், நான்கு கட்சி தலைவர்களிடமும் நான் ஏற்கனவே ஒற்றுமையான முடிவை கோரியுள்ளேன்,” என அவர் கூறினார்.
PN கூட்டணியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் கூட்டு ஒப்புமை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதையும், அதனால் எந்த அவசரத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



