சபா தேர்தலில் படுதோல்விக்குப் பிறரைக் குறை கூறும் அந்தோனி லோக்
- Tamil Malar (Reporter)
- 12 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 12-
டிஏபி கட்சியின் பொதுச்செயலாளரும், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக், சபா மாநிலத் தேர்தல் (PRN17) 2025-இல் தனது கட்சி அடைந்த மோசமான தோல்வி குறித்து திடீரென தொனியை மாற்றியுள்ளார். டிஏபி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வேட்பாளர்கள் தோல்வியடைந்த நிலையில், இந்தத் தோல்விக்கான பொறுப்பை முழுமையாக மற்றவர்கள் மீது திணிக்க முயற்சிப்பதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த நவம்பர் 29-ஆம் தேதி இரவு தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில், பிகேஆர் துணைத் தலைவரும் பொதுச்செயலாளருமான புசியா சாலே, பாக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி சபா மக்கள் கூட்டணி (GRS) உடன் இணைந்து அரசு அமைக்கும் என முன்கூட்டியே அறிவித்தார். இதனை அந்தோணி லோக் கடுமையாக விமர்சித்து, புசியாவை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
இன்னும் அதிர்ச்சி தரும் வகையில், பாக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு அந்தோணி லோக் ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளார். மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க மறுமலர்ச்சித் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் டிஏபி தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, 2022 நவம்பரில் இருந்து பங்கேற்றுள்ள ஒன்றிய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட விருப்பங்களையும் பரிசீலிக்கும் என எச்சரித்துள்ளார்.
டிஏபியின் இந்த திடீர் நிலைப்பாடு மாற்றம், ஒன்றிய அரசில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குள் புதிய பிளவை ஏற்படுத்துமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



