புத்ராஜெயாவை பாஸ் கைப்பற்ற வேண்டுமென்றால் ஹாடி விலக வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

(அரசியல் ஆய்வாளர்கள் கருத்து)


கோலாலம்பூர், ஜூன் 16 -

அப்துல் ஹாடி அவாங்கின் தொடர்ச்சியான தலைமைத்துவம் பாஸ் கட்சியை தேக்கமடையச் செய்யும் அபாயம் இருக்கின்றது என்று. அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.அக்கட்சி இதை தவிர்க்க வேண்டுமென்றால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஹாடி விலக வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தற்போது 77 வயதாகும் ஹாடி, தமது இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தில் அந்த இஸ்லாமிய கட்சியை மாற்றியமைத்த பெருமையைப் பெற முடியும் என்று, நுசாந்தரா கல்விக் கழகத்தைச் சேர்ந்த அஸ்மி ஹாசன் கூறுகிறார்."கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் சிறப்பாகச் செயல்படும் கட்சியாக மாறியிருக்கும் பாஸ் கட்சிக்கு அவர் புத்துயிர் அளித்துள்ளார்" என்று எஃப்எம்டியிடம் அஸ்மி தெரிவித்தார்.

இருப்பினும், தேசிய அளவில் கட்சியின் லட்சியங்களைப் பொறுத்தவரை ஹாடி “உச்ச வரம்பை எட்டியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி 43 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதோடு, பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களையும் அது கைப்பற்றியது.

“ஆனால், இப்போது அக்கட்சி மலாய்க்கார வாக்காளர்களை ஈர்ப்பதில் ஒரு பீடபூமியை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் அது தோல்வி கண்டிருக்கிறது. இதன் அடிப்படையில், ஹாடியின் காலம் முடிந்து விட்டது" என்று அஸ்மி கூறினார்.

பழைமைவாத மலாய் மையப் பகுதியில் பாஸ் விசுவாசமான ஆதரவாளர்களைக் கொண்டிருந்தாலும், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களிடையே அது சிறிய முன்னேற்றத்தைக்கூட அடையவில்லை என்றும் அஸ்மி கூறினார்.இந்நிலையில், மத்திய அரசாங்கத்தை வழிநடத்த வேண்டுமென்றால், நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உள்ளடக்கிய ஒரு புதிய தலைமைத்துவத்தை பாஸ் கட்சி அவசியம் உருவாக்க வேண்டும் என்பதோடு, ஒரு பரந்த தேசிய தோற்றத்தையும் அது உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கட்சியை புதிய தலைமைத்துவம் ஏற்காத வரையில், பாஸ் கட்சியினால் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று தாம் நம்புவதாக, மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஷஸா சுக்ரி கூறினார்.எனினும், தனது அடுத்த தலைவராக நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை பாஸ் கட்சி பெயர் குறிப்பிடும் என்று தாம் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.

"கட்சித் தலைமைத்துவத்தை ஏற்க விருப்பவர்கள் கட்சியின் உலாமாக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். திரெங்கானு மாநில மந்திரி பெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் போன்றவர்கள் "உலாமாக்கள் தகுதி இல்லாதவர்கள்" என்றே அக்கட்சியினரால் கருதப்படுவார்கள்."ஆதலால், முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவைப் பெறும் அக்கட்சியின் முயற்சியில் மாற்றங்கள் ஏதும் இருக்காது” என்று ஷஸா சுக்ரி தெரிவித்தார்.

மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவைப் பெறுவதில் மலாய்-முஸ்லிம் கட்சிகள் போராடிக் கொண்டிருப்பதாக, பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அமார் அப்துல்லா இம்மாதம் 7ஆம் தேதி ஒப்புக் கொண்டிருந்தார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான
அரசாங்கத்திற்கான ஆதரவு குறைந்து வருவதாகவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் வேளையில், பாஸ் கட்சி இந்த வாக்காளர்களைக் குறிவைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஹாடிக்கு பதிலாக கட்சித் தலைவர் பதவியை ஏற்கக் கூடிய தலைவர்களை பாஸ் ஏற்கெனவே கொண்டிருப்பதாக, மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கார்த்தினி அபு தாலிப் தெரிவித்தார்.சம்சூரி மொக்தார், ஜெராந்துட் எம்பி கைரில் தினம் கிருடின் மற்றும் ஃபட்லி ஆகியோரும் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்களாக பார்க்கப்படுகின்றனர். தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஹாடியை கட்சியின் ஆலோசகராக நியமிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஹாடி பதவி விலகக் கூடிய வாய்ப்பில்லை என்று தாஸ்மானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சின் கூறினார்.“பாஸ் கட்சியை ஒன்றிணைத்து வைத்திருக்கும் "பசை" தாம்தான் என்பது அவருக்கு (ஹாடி) தெரியும். இன்று நாம் காணும் பாஸ் கட்சி, அடிப்படையில் ஹாடியை பிரதிபலிக்கிறது" என்று எஃப்எம்டியிடம் சின் தெரிவித்தார்.

அக்கட்சியின் இதர தலைவர்களும் இனம் மற்றும் சமயம் மீது "தீவிர போக்குடையவர்களாக இருப்பதால், கட்சித் தலைவராக ஹாடி இல்லாவிட்டாலும், மலாய்க்காரர் அல்லாதவர்கள் அக்கட்சியை ஆதரிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்."ஹாடி பதவி விலகினாலும், முழு அளவில் சீரமைப்பு செய்யப்படாத நிலையில் பாஸ் கட்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாது" என்று சின் தெரிவித்தார்.

Penganalisis politik menyarankan Presiden PAS, Abdul Hadi Awang berundur demi memberi ruang kepimpinan baharu lebih profesional. Walaupun beliau berjaya menguatkan PAS, parti itu sukar menarik sokongan bukan Melayu dan perubahan diperlukan untuk terus maju di peringkat nasional.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *