மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரம் குறைந்திருக்கிறது! – சுகாதார அமைச்சர்

top-news

கோலாலம்பூர், அக் 27: நாடு முழுவதும் உள்ள 39 முக்கிய அரசு மருத்துவமனைகளில், 28 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வார்டுகளில் அனுமதிக்கப்படுவதற்கான சராசரிக் காத்திருப்பு நேரம் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கெப்ளி அகமது தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத நிலவரப்படி இந்த முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக அவர் மக்களவையில் கூறினார்.

கடந்த 2025ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் 55.26 விழுக்காடு மட்டுமே, படுக்கை கிடைப்பதற்கான சராசரிக் காத்திருப்பு நேரத்தை எட்டு மணி நேரத்திற்குள் பதிவு செய்திருந்தன.

இதற்கிடையே, நிபுணத்துவ வசதிகள் குறைவாக உள்ள மருத்துவமனைகள் மற்றும் நிபுணர் மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகள் உட்பட 103 மருத்துவமனைகளில் 94 மருத்துவமனைகளில், படுக்கைக்கான சராசரிக் காத்திருப்பு நேரம் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஏற்படும் நெரிசல், சிகிச்சைக்கான காத்திருப்பு நேரம் மற்றும் வார்டுகளில் அனுமதிக்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறுகிய கால நடவடிக்கையாக, 2024ஆம் ஆண்டு 14 மருத்துவச் சேவைகளுக்கு வெளிப்புறச் சேவை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள 75 மருத்துவமனைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும், நோயாளிகளின் சிகிச்சை நடைமுறைகளை விரைவுபடுத்தும் வகையில், லீன் ஹெல்த்கேர் திட்டத்தின் கீழ் படுக்கை மேலாண்மை, மருத்துவமனையிலிருந்து வெளியேறக் காத்திருக்கும் நோயாளிகளுக்கான தனிப்பட்ட காத்திருப்புப் பகுதிகள் மற்றும் பகல்நேர சிகிச்சைப் பிரிவுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு இடையே நிபுணத்துவ மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் மருத்துவமனைக் குழுமங்களும் சேவை வலையமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, நிலையான உடல்நிலையில் உள்ள நோயாளிகள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரக் கிளினிக்குகள் மூலம் சிகிச்சை அளிப்பதையும் அமைச்சு விரிவுபடுத்தி வருகிறது.

நீண்டகாலத் திட்டமாக, மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு, படுக்கை வசதிகள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதற்காகக் கட்டடங்களைப் புதுப்பித்தல், விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்