நஜிப் ரசாக்கின் எட்டு மணி நேர வெளிநடமாட்டம் – நான்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக சிறைச்சாலைத் துறை விளக்கம்
- Shan Siva
- 14 Nov, 2026
கோலாலம்பூர், நவ 14: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வெள்ளிக்கிழமை சுமார் எட்டு மணி நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றது குறித்து எழுந்த சர்ச்சைக்கு மலேசிய சிறைச்சாலைத் துறை விளக்கம் அளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 10.25 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட நஜிப், மாலை 6.25 மணிக்குத்தான் மீண்டும் வீடு திரும்பியதாக சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
இந்த எட்டு மணி நேரத்தில் அவர் வெள்ளிக்கிழமை தொழுகையில் மட்டும் பங்கேற்கவில்லை என்றும், மொத்தம் நான்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் துறை விளக்கியுள்ளது.
முதலாவதாக, கோலாலம்பூர் மருத்துவமனையின் எலும்பியல் பிரிவில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த மருத்துவப் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளார்.
அதன்பிறகு, காஜாங் சிறைச்சாலையின் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த சமய ஆசிரியருடன் குர்ஆன் வகுப்பிலும், சிறைச்சாலையின் உளவியல் அதிகாரியுடன் ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டுள்ளார்.
நஜிப்பின் அனைத்து வெளிநடமாட்டங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேவைகளின் அடிப்படையில் நடைபெற்றதாகவும், அவை சிறைச்சாலைத் துறையின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், வீட்டுக் காவல் நிபந்தனைகள் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாடுகள், மருத்துவச் சிகிச்சைகள், மறுவாழ்வு மற்றும் மனநல ஆலோசனைத் திட்டங்கள் ஆகியவை சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களின் பராமரிப்பில் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுவதாகவும் சிறைச்சாலைத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 10ஆம் தேதி, SRC International நிறுவனத்துடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்காக நஜிப், காஜாங் சிறைச்சாலையிலிருந்து கோலாலம்பூர் லங்காக் டூத்தா பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது சிறைத்தண்டனை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
நிபந்தனையுடன் வழங்கப்பட்ட மன்னிப்பின் அடிப்படையில், அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ, ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடவோ, சமூக ஊடகங்களில் தோன்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வீட்டுக் காவலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேறவும் அனுமதி இல்லை.
இருப்பினும், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் அவர் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

