நஜிப் வீட்டுக்காவல் விவகாரம் – நீதிமன்ற உத்தரவில் திருத்தம் தேவை - ராம்கர்பால் சிங்

top-news

கோலாலம்பூர், நவ 10: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விவகாரத்தில், சட்டத்துறை தலைமை அலுவலகத்தின் நிலைப்பாட்டை டிஏபி கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ராம்கர்பால் சிங் ஆதரித்துள்ளார்.

நஜிப்புக்கு அரச மன்னிப்பு வழங்கும் மாமன்னரின் அதிகாரத்தைச் சட்டத்துறை தலைமை அலுவலகம் கேள்விக்குள்ளாக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவில் உள்ள சட்டரீதியான குறைபாடுகளைத் தெளிவுபடுத்தவே முயற்சி செய்கிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற உத்தரவில் இடம்பெற்றுள்ள ‘விடுவிப்பு’ என்ற சொல், நஜிப்பை வீட்டுச் சிறைக்கு மாற்றுவதற்குப் பதிலாக சிறையிலிருந்து முழுமையாக விடுவிப்பதாகவும் பொருள் கொள்ளப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச மன்னிப்பு உத்தரவின்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தினால், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவில் உள்ள சொற்களைத் தெளிவுபடுத்துவது அவசியம் என்றும், அதற்காக உயர் நீதிமன்றத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் ராம்கர்பால் தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ்ஆர்சி வழக்கில் தண்டனையை நிறைவு செய்த பிறகு, 1எம்டிபி வழக்கில் விதிக்கப்பட்டுள்ள மற்றொரு சிறைத் தண்டனையையும் நஜிப் அனுபவிக்க வேண்டியுள்ளது. அந்தத் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நஜிப்பின் இல்லம் சிறைச்சாலையாக அரசிதழில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த அறிவிப்பு எஸ்ஆர்சி வழக்கின் தண்டனைக் காலத்துக்கு மட்டுமே பொருந்துமா அல்லது 1எம்டிபி வழக்கின் தண்டனைக்கும் பொருந்துமா என்பதில் தெளிவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தெளிவுபடுத்தல் மாமன்னரின் அரச மன்னிப்பு உத்தரவை மாற்றுவதற்கான முயற்சி அல்ல என்றும், நீதிமன்ற உத்தரவில் ஏற்பட்டிருக்கக்கூடிய தவறைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை மட்டுமே என்றும் ராம்கர்பால் விளக்கமளித்துள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

M.Mutham Chettiar Muthusamy

சிறந்த செய்தி

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்