உயிரினங்களை சிலையாக மாற்றும் மரண ஏரி Lake Natron
- Muthu Kumar
- 16 Jan, 2026
ஆப்ரிக்காவின் தான்சானியாவில் உள்ள ஒரு ஏரி அமைந்துள்ளது. அதன் பெயர்தான் நேட்ரான் ஏரி (Lake Natron) இந்த ஏரி முற்றிலும் மாறுபட்டது; இது ஒரு 'மரண ஏரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் தண்ணீர் ரத்த சிவப்பாகக் காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல், இதில் விழும் பறவைகள் மற்றும் விலங்குகளைப் பிணங்களாக மாற்றி, பின் அவற்றை மம்மிகள் போலக் கல்லாக உறைய வைக்கிறது.
பிரபல புகைப்பட கலைஞர் நிக் பிராண்ட், 2013-ல் இந்த ஏரியின் கரையில் கண்டெடுத்த வௌவால்கள் மற்றும் பறவைகளின் சடலங்கள், ஏதோ 'ஹாரி பாட்டர்' படத்தில் வருவது போலக் கல்லாக உறைந்து கிடந்தன. அவர் அந்த உடல்களை உயிருடன் இருப்பது போன்ற தோரணையில் வைத்துப் புகைப்படம் எடுத்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஏரியின் தண்ணீர் ஏன் இவ்வளவு ஆபத்தானது என்பதற்கு பின்னணியில் 2 காரணங்கள் உள்ளன.
அதிக காரத்தன்மை (pH 10.5), இந்த ஏரியின் நீரில் சோடியம் கார்பனேட் மற்றும் கால்சியம் பைகார்பனேட் அதிக அளவில் உள்ளன. இதனுள் விழும் உயிரினங்களின் கண்கள் மற்றும் தோலை இந்தத் தண்ணீர் சுட்டெரித்துவிடும். எகிப்தியர்கள் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்திய 'சோடியம் கார்பனேட்' இந்த ஏரியில் இயற்கையாகவே உள்ளது. இது உடல்கள் அழுகிப் போகாமல் தடுத்து, அவற்றை உலர வைத்து (Dehydration) இறுகச் செய்கிறது. இதனால்தான் இறந்த விலங்குகள் கல்லால் செதுக்கப்பட்ட சிலைகள் போலக் காட்சியளிக்கின்றன.
சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நில அதிர்வுகள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளால் இந்த ஏரி உருவானது. இதற்கு அருகிலுள்ள 'ஓல் டோய்ன்யோ லெங்காய்' (Ol Doinyo Lengai) என்ற எரிமலையிலிருந்து வரும் தாதுக்கள் இந்த ஏரியில் கலக்கின்றன. ஏரியின் சிவப்பு நிறத்திற்குத் தாதுக்கள் மட்டுமே காரணமல்ல; உப்பை விரும்பும் ஹாலோஆர்க்கியா மற்றும் சயனோபாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளே இந்த அடர் சிவப்பு நிறத்தைத் தருகின்றன.
இந்த ஏரி ஆபத்தானது என்றாலும், இது உயிரினங்களே இல்லாத இடமல்ல. ஆச்சரியமாக, லெஸ்ஸர் ஃபிளமிங்கோ பறவைகளுக்கு இது ஒரு சொர்க்கம். மற்ற விலங்குகளுக்கு எமனாக இருக்கும் இந்த ஏரியின் நீர், ஃபிளமிங்கோக்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. ஏரி ஆபத்தானது என்பதால் வேட்டை விலங்குகள் அங்கு வருவதில்லை. இதனால் ஃபிளமிங்கோக்கள் பயமில்லாமல் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. ஏரியில் உள்ள சிவப்பணுப் பாசிகளை (Algae) இந்தப் பறவைகள் உணவாகக் கொள்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



