ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு!

top-news
FREE WEBSITE AD

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று இரவோடு இரவாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது போர் விமானங்கள் வழியாக குண்டுவீசி கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக இருநாடுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், பலூச் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து எல்லையில் மோதல் நடந்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமைப்பினர் பாகிஸ்தானுக்குள் குண்டுவெடிப்பு சம்பவம், தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் தான் இரவோடு இரவாக பாகிஸ்தான், திடீரென்று ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதன்படி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான நங்கர்ஹார் மற்றுமு பக்திகா மாகாணங்களில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் தனது போர் விமானங்கள் மூலமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் இறந்துள்ளனர். குறிப்பாக பெஹ்சுத் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர். இதனை ஆப்கானிஸ்தான் அரசு செய்தி தொடர்பாளர் சபிபுல்லா முஜாஹித் உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்,''நேற்று இரவு, நங்கர்ஹார் மற்றும் பக்திகா மாகாணங்களில் உள்ள எங்கள் பொது மக்களைக் குண்டுவீசித் தாக்கினர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் தளபதிகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு பலவீனங்களை இதுபோன்ற குற்றங்கள் மூலம் ஈடுசெய்கிறார்கள்'' என்று கூறினார்.

அதேபோல் இந்த தாக்குதலை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அட்டாவுல்லா தாராரும் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உளவு துறை தகவல்களின் அடிப்படையில் தாலிபான் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு சொந்தமான 7 பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை தேர்வு செய்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது'' என்று கூறியுள்ளார்.

தற்போது ரமலான் மாதம் தொடங்கிய நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பஜௌர் மற்றும் பானு ஆகிய இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. சமீபத்தில் இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். அதன்பிறகு பஜெளர் பகுதியில் நடந்த தாக்குதலில் 11 வீரர்கள், ஒரு குழந்தை இறந்தனர். பானுவில் நடந்த தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதல்களை ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பயங்கரவாத அமைப்புகள் தான் காரணம் என்று அந்த நாடு கருதியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் துணை அமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை இரவோடு இரவாக பாகிஸ்தான் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் தற்போது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தலாம். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் உச்சம் தொட்டுள்ளது. அதோடு இருநாடுகளின் எல்லைகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *