மாணவர்களின் உலக அளவிலான தேர்ச்சிக்கு மலாய் & பிற மொழிகள் அவசியம்! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

பெந்தோங், ஜன 22தேசியப் பள்ளிகள் உட்பட அனைத்து மாணவர்களும் மலாய் மொழியில் (Bahasa Melayu) முழுமையான தேர்ச்சி பெறுவது, நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முக்கிய அம்சமாகும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தேசிய மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கொள்கை, மாணவர்கள் தங்களது தாய்மொழி மற்றும் அரபு, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை கற்றுக்கொள்ள அரசாங்கம் வாய்ப்பளிக்கவில்லை என்பதல்ல இதன் பொருள் என்றும் அவர் விளக்கினார்.

இந்த நாட்டில் மாணவர்கள் மலாய் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தும் அதே நேரத்தில், உலகளாவிய போட்டியில் நிலைநிறுத்த ஆங்கில மொழித் திறனும் அவசியம் என்பதையும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

நமது தேசிய கல்வி முறை, சீன மற்றும் தமிழ் தேசிய வகைப் பள்ளிகளில் (SJKC, SJKT) பயிலும் குழந்தைகள் சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் திறம்பட தேர்ச்சி பெற அனுமதிக்கிறது. ஆனால் அதே சமயம், அனைவரும் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான மலாய் மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டும்  என அவர் பகாங், பெந்தோங் SJKC பெர்டிங் பள்ளியில் நடைபெற்ற சீன சமூகத்துடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அனைத்து மாணவர்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெறும் வகையில், சீன மொழி மற்றும் பிற மொழி ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்க கல்வி அமைச்சுக்கு (MOE) உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீன தேசிய வகைப் பள்ளிகளில் மட்டுமல்ல, தேசியப் பள்ளிகளிலும் சீனம், தமிழ் அல்லது அரபு மொழிகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவே எதிர்கால இலக்கு. மொழி தொடர்பாக இனங்களுக்கு இடையே முடிவில்லா விவாதங்கள் எழாமல் இருக்க வேண்டும்  என்று பிரதமர் கூறினார்.

குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; அவற்றை விவாதிக்கலாம். ஆனால் இலக்கை இழக்கக் கூடாது. மலேசியா முன்னேற வேண்டும் என்றால், குழந்தைகள் வெற்றி பெற வேண்டும் என்றால், பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க வேண்டும் என்று கூறினார்.

அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். மொழிகளில் தேர்ச்சி பெற வேண்டும். டிஜிட்டல் திறன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI), கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாணவர்கள் திறன் பெற வேண்டும். இதுவே குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றார்.

பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சிறந்த நிலையில் பராமரிக்கப்படுவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *