காட்டுத் தீயை அணைக்க மலேசியா தயார்! இந்தோனேசியா பதில் சொல்ல வேண்டும்

top-news

புத்ராஜெயா, அக் 23: இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மனிதவள உதவிகளை வழங்க மலேசியா தொடர்ந்து தயாராக இருப்பதாக அரசாங்கப் பேச்சாளரும் தொடர்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

மலேசியா முன்வைத்த உதவித் திட்டத்திற்கு இந்தோனேசிய அரசாங்கத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஃபாஹ்மி, மலேசிய வெளியுறவு அமைச்சும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சும் இந்தோனேசியத் தரப்பிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

மலேசியா – இந்தோனேசியா இடையிலான நல்லுறவைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டியதுடன், காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க மலேசியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதையும் ஃபாஹ்மி சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, காட்டுத் தீ தொடர்பாக 11 நிறுவனங்கள் மீது இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தோனேசியாவில் காடுகளை எரித்த சம்பவங்களில் மலேசிய நிறுவனங்கள் எதுவும் தொடர்புடையதாக அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு Bombardier CL-415MP விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 பணியாளர்களை அனுப்ப மலேசியா முன்வந்திருந்தது.

இந்த உதவியை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஏற்றுக்கொண்டதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி முன்னதாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், உதவியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ பதில் இன்னும் கிடைக்கவில்லை என ஃபாஹ்மி தெரிவித்துள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்