சரிந்த டாலர் மதிப்பு - இனி தங்கமே எதிர்காலம்?

top-news
FREE WEBSITE AD

சர்வதேச அளவில் போர் பதற்றம், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் வரலாற்றில் இல்லாத அளவு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகபட்ச உயர்வை தொட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 3680 டாலருக்கு விற்பனையாகிறது. இதேபோல வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்க விலை வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வை தொட்டுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, அமெரிக்காவின் "Treasury yields" எனப்படும் கருவூல லாப ஈவு வட்டி விகிதங்கள் சரிந்தது, முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்து வருகிறது.

இதற்கிடையில், இந்த வாரம் நடைபெறவுள்ள அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) கூட்டம் தங்க விலை இயக்கத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய சூழலில் கடந்த திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 3,680.80 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.

இதற்கு முன்பு 3,685.39 டாலர் என்ற புதிய சாதனை உச்சத்தை தொட்டது. கடந்த வாரம் மட்டும் தங்க விலை சுமார் 1.6% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டிசம்பர் மாத அமெரிக்க தங்க ஃப்யூச்சர்ஸ் விலையும் 3,719 டாலருக்கு உயர்ந்ததையும் கவனிக்க வேண்டும். டாலர் குறியீடு (Dollar Index) 0.3% குறைந்து ஒரு வாரத்திற்குப் பிறகு மிகக் குறைந்த நிலையை எட்டியது. இதனால் பிற நாணயங்களில் தங்கம் வாங்குவோருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், அமெரிக்க அரசு 10 ஆண்டுக்கான கருவூல லாப பத்திர வட்டி விகிதத்தையும் குறைத்ததும், தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி, 25 புள்ளிகள் வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். சிலர் கூடுதல் 50 பாயிண்ட் குறைப்பும் சாத்தியம் என கருதுகிறார்கள்.

Zaner Metals நிறுவனத்தின் உலோக நிபுணர் பீட்டர் கிராண்ட் கூறுகையில், தங்கத்தின் அடுத்த இலக்கு விலை $3,700, $3,730 மற்றும் $3,743 ஆக இருக்கலாம் என்று தெரிவித்தார். தங்கம் வருமானம் ஈட்டாத சொத்து என்றாலும், பாதுகாப்பான முதலீடு (Safe Haven) என்ற அடையாளத்தால், வட்டி விகிதங்கள் குறைந்த சூழலில் அதிக வரவேற்பைப் பெறுகிறது. மேலும், சீனா தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிகளில் சலுகை அளிக்கலாம் என்ற தகவலும், உலகளாவிய தேவை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.

அரசுகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் ஆகிய இரண்டு காரணிகளும் தங்க சந்தையில் விலை உயர்வை தூண்டும் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. கடந்த வாரம் வெளியான அமெரிக்க பொருளாதார தரவுகள், விலை ஏற்றம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டின. இதனால், வட்டி விகிதக் குறைப்பு உறுதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் மட்டுமல்லாது சர்வதேச அளவில் வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருக்கிறது. வெள்ளியைப் பொருத்தவரை தற்போதைய சூழலில் 42.62 டாலராகவும், பிளாட்டினம் 1400.77 டாலராகவும் உள்ளது. வெள்ளியின் விலை 1.1%, பிளாட்டினத்தின் விலை 0.7% உயர்வு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *