சாதி பெருமை பேசி வயிறு வளர்ப்பவன் நானல்ல - மன்னிப்பு கோரிய பார்த்திபன்!
- Muthu Kumar
- 18 Mar, 2026
ஐதராபாத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் பேசிய நடிகரும் இயக்குனருமாக பார்த்திபன், நான் நாயுடு அப்பாயி, என்று சாதி பெருமை பேசிய தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நேற்று வீடியோ மூலம் விளக்கம் அளித்த பார்த்திபன், தற்போது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், எல்லாத் தவறையும் உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவன் நான். சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி.. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது.
அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது 'இவன்' உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல.
இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத்சிங் படத்தில் வில்லனாக நடித்துள்ள பார்த்திபன் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், பேசியபோது, என்னைப்பற்றி ஒரு சிறிய முன்னுரை. நான் பார்த்திபன். ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஒரு நாயுடு பையன். ஆமாம், ஒரு நாயுடு பையன். ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்த காரணத்தால் எனக்குத் தெலுங்கு தெரியாது. தமிழ் தான் எனக்கு இயல்பாக வரும் மொழி. ஆனால் இனி நேரில் காணும்போது, அது இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நான் முழுமையாகத் தெலுங்கில் பேசுவேன் என்று இந்த மூர்த்தி உறுதி அளிக்கிறான். மூர்த்தி என்பதுதான் எனது உண்மையான பெயர்," என்று பார்த்திபன் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



