மோடியின் நண்பன் நான்! கோயிலை உடைக்க சொல்வேனா? அன்வார் ஆதங்கம்!
- Thinagaren Sanggaren
- 15 Feb, 2026
பிப்ரவரி 15,
உலகின் தீவிரமான இந்து மத நம்பிக்கை உடையவரான இந்தியாவின் பிரதமர் மோடியின் நண்பன் நான் எனும் போது, நான் எப்படி கோயில்களை இடிக்க உத்தரவிடுவேன் என பிரதமர் அன்வார் கேள்வி எழுப்பினார். நான் ஒரு போதும் கோயில்களை உடைக்க சொல்லவில்லை என பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார். கோயில்கள் உட்பட அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களும் முறையாகச் சட்டத்தைப் பின்பற்றி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனும்படியாக நான் சொன்னேன். ஒரு நாளும் கோயில்களுக்கு எதிராக நான் செயல்பட்டதில்லை என பிரதமர் அன்வார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். நான் கூறியதைக் கவனியுங்கள். தவறாகப் புரிந்து கொண்டு ஒரு கும்பல் கோயிலை உடைக்க கிளம்பியிருக்கிறது. என்னுடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்டு அதன்பின்னர் செயல்படுங்கள் என பிரதமர் அன்வார் விளக்கமளித்தார்.
நமக்கென சட்டம் இருக்கிறது. அந்த சட்டம் மக்கள் நலனைப் பாதுக்காப்பதில் முன்னுரிமை அளிக்கிறது. மக்களின் நலன் சமயம் சார்ந்தது. மலேசியாவில் பல்லின மக்களும், பல சமயங்களும் பின்பற்றப்படுகிறது. அப்படியான சமயங்களைப் பாதுகாக்க வேண்டும். அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் சரி. அந்த சமயத்திற்கு எதிராக மடானி அரசு செயல்படாது என அன்வார் உறுதியளித்தார். கடந்த 2 நாட்களாக மலாய் ஆட்சியாளர்களுடன் நடைபெற்ற சுல்தான்கள் கூட்டத்தில் கோயில்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பாக மலேசிய இந்துகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட கூடாது என கலந்தாலோசிக்கப்பட்டது. அமைச்சரவையிலும் இது குறித்து முக்கிய கலந்துரையாடலை நடத்தியிருக்கிறேன் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இந்த நாட்டில் இருக்கும் இந்து, இஸ்லாம், பெளத்தம், சீக்கியம், என எந்தவொரு மதத்தைப் பின்பற்றும் அனைத்து தரப்பினருக்கும் நான் பிரதமர். இது மடானி அரசு. மலேசியாவின் நல்லிணக்கத்தைக் கலக்கம் அடைய செய்யும் எந்தவொரு தனிநபருக்கும் ஆதரவாகவும் நான் செயல்படமாட்டேன். இதுவரையும் நான் அப்படியாகச் செயல்பட்டதில்லை. இனியும் அப்படி செயல்படமாட்டேன். மலேசியாவில் இருக்கும் எந்தவொரு சமயத்திற்கும் எதிராகச் செயல்படும் நபர்களை அங்கீகரிக்க வேண்டாம் என பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



