போர் சூழல் - எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பில்லை! - அன்வார்
- Shan Siva
- 08 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 8: வரவிருக்கும் மாதங்களில் விலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருந்தபோதிலும், மலேசியா எண்ணெய் விநியோக நெருக்கடியை எதிர்கொள்ளாது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், எண்ணெய் இறக்குமதியாளராக பெட்ரோனாஸின் வலுவான சாதனைப் பதிவும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடனான அதன் நல்லுறவுகளுமே இதற்கு காரணம் என்று கூறினார்.
நிகர எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக மலேசியா இருக்கிறது. ஏனெனில் நமது பெட்ரோலியம் பொருட்கள் பிரீமியம் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் விலை சற்றே அதிகம். ஆனாலும், கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்கிறோம் என்று அவர் கூறினார்.
விநியோகத்தைப் பொறுத்தவரை எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை. எரிபொருள் விலையில் சில இடையூறுகள் ஏற்படலாம், ஆனால் வரும் மாதங்களுக்கு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கோலாலம்பூர்-அங்காரா நிகழ்வின் கேள்வி-பதில் அமர்வின் போது கூறினார்.
ஈரான் போரினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
குறைந்தபட்சம் மே மாதம் வரை, ஒரு லிட்டர் RM1.99 என்ற மானிய விலையைத் தக்கவைக்க மலேசியாவிடம் போதுமான RON95 பெட்ரோல் இருப்பதாக கடந்த மாதம் அன்வார் கூறினார்.
இருப்பினும், மோதல் தொடங்கிய வாரங்களில், புத்ராஜெயா மேற்கு மலேசியாவில் டீசல், RON97 மற்றும் மானியமில்லாத RON95 ஆகியவற்றின் விலையை கணிசமாக உயர்த்தியது.
கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, மார்ச் மாத இறுதியில் மதிப்பிடப்பட்ட எரிபொருள் மானியச் செலவு மாதத்திற்கு RM4 பில்லியனாக இருந்தது என்று அன்வார் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அரசாங்கம் பல எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. இதில், குறிப்பிட்ட சில அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடுவதும், தனியார் துறையையும் அதைப் பின்பற்ற ஊக்குவிப்பதும் அடங்கும்.
புத்ராஜெயா மாதாந்திர BUDI95 ஒதுக்கீட்டையும் 300 லிட்டரிலிருந்து குறைத்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



