டத்தோ வி.எல். காந்தன் காலமானார்
- Shan Siva
- 16 Sep, 2026
கோலாலம்பூர், செப் 16: நாட்டின் மூத்த அரசியல்வாதி டத்தோ வி.எல். காந்தன் காலமானார். அவருக்கு வயது 89.
1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்த டத்தோ வி.எல். காந்தன் நேற்று காலமானார்.
அவரது மறைவுச் செய்தியை குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளனர். அன்னாருக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று செப்டம்பர் 16ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு, எண் 6, லோரோங் 9/5பி, பெட்டாலிங் ஜெயா என்கிற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு, நாளை செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தகனம் நேரம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றும், கம்போங் துங்கு மின்சுடலை செக்ஷன் 51, பெட்டாலிங் ஜெயா பகுதியில் தகனம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மறைவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த டத்தோ வி.எல்.காந்தன் ம.கா.வின் முன்னாள் தலைவரும், அமைச்சராகவும் திகழ்ந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் டத்தோ வி.எல். காந்தன் பொற்றுப்பேற்று சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடைமைத் திட்டம் மற்றும் ஈயச் சுரங்க தொழிலாளர்களுக்கான வீட்டுடமைத் திட்டத்திற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வெற்றி கண்டவர்.
இந்நிலையில் அன்னாரது மறைவுக்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மிகவும் கண்ணியமான ஆற்றல் மிக்க ஒரு தலைவராக டத்தோ வி.எல். காந்தன் திகழ்ந்ததாக அவர் புகழாரம் சூட்டினார்.
டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் போலவே நேர்மையாக அரசியல் பணியாற்றி வந்தவர் என்பதோடு, தனக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, சிறந்த நண்பராக செயல்பட்ட பண்பாளர் என்று ஓம்ஸ் பா. தியாகராஜன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், குடும்பத்தினருக்குத் தமது வருத்தத்தைப் பதிவு செய்வதாகவும் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



