இயல்பாகவே ஆளும் கட்சிக்குத்தான் முன்னிலை! - ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 29 Jul, 2026
சிரம்பான், ஜூலை 29: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தங்களை வெற்றியாளர்களாக முன்கூட்டியே கருதாமல், அண்டர்டாக் (Underdog) என்ற நிலைப்பாட்டிலேயே பிரசாரத்தை முன்னெடுக்க விரும்புவதாக பாரிசான் நேஷனல் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவை முன்னிட்டு பேசிய அவர், தற்போதைய மாநில அரசை எதிர்கொள்வதால் இயல்பாகவே ஆளுங்கட்சிக்கே முன்னிலை இருப்பதாகக் கூறினார்.
அதேவேளையில், முந்தைய மாநில அரசால் வழங்கப்படாத புதிய மாற்றங்களையும் சிறந்த ஆட்சியையும் வாக்காளர்களுக்கு வழங்கும் திறன் பாரிசான் நேஷனலுக்கு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளில், ஐந்து ஆண்டுகளில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒன்றாகும் என்றும் அவர் நினைவூட்டினார்.
மேலும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) பயிற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் உயர்ந்த ஊதியம் பெறக்கூடிய திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க உதவுவதாகவும் கூறினார்.
நெகிரி செம்பிலான் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கேட்கப்பட்டபோது, தேர்ந்தெடுக்கப்படக்கூடிய 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இருப்பதாகவும், வெற்றி பெற்ற பின்னரே சிறந்த வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் ஜாஹிட் தெரிவித்தார்.
முன்கூட்டிய வாக்குப்பதிவில் 91% வாக்காளர்கள் வாக்களித்திருப்பது மக்களாட்சிக்கான நல்ல அறிகுறி எனக் குறிப்பிட்ட அவர், அதே உற்சாகம் பொதுவாக்குப்பதிவு நாளிலும் தொடர வேண்டும் என்று நம்பிக்கை வெளியிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



