ஔவையின் மூதுரை பாடல்களில் சிந்தனை!

top-news
FREE WEBSITE AD

மொழி மனிதனின் தொடர்பு கருவி மட்டுமல்ல. அறிவுத் துறையின் வளர்ச்சிக்கும் சிந்தனைத் திறன் மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானதாக அமைகிறது. இதற்கேற்றவாறு இன்றைய காலகட்டத்தில் மொழி தொடர்பான ஆய்வுகளும் காலத்திற்குக் காலம் மாற்றமும் வளர்ச்சியும் கண்டு வருகிற. தற்கால மொழி அறிஞர்கள் மொழியை உயிரியல் பின்புலத்தில் (Biolinguistic approach) ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த அடிப்படையில் மொழியை ஓர் அறிவுப்புலன் (intellectual organ) கருவியாக நாம் பார்க்க முடிகின்றது. மனித உடம்பில் ஐம்புலன்கள் இன்றியமையாத கருவிகளாக இருப்பதுபோல் மொழியும் முக்கியப் புலனாகக் கருதப்படுகிறது. அவ்வாறு முக்கியத்துவம் நிறைந்த மொழியில் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் வாசகர்களுக்குப் படிப்பிணையாக இருந்து மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கும் மீட்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றது.

இலக்கியங்கள் என்பது உயர்ந்த நோக்கத்தைக் கொண்டு அறம் சார்ந்த கருத்துகளை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வகையில் சங்க காலம் தொட்டு தமிழ்மொழியில் பல்வேறு இலக்கியங்கள் படைக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றில் ஔவையாரின் மூதுரையும் ஒன்று. மூதுரை, ஔவையார் இயற்றிய தமிழ் நீதி நூல்களில் ஒன்றாகும். இது அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இதனை மூதுரை (முதுமை + உரை) என அழைக்கின்றனர். ஔவையாரின் மூதுரை சங்க காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சூழலில் மானுடர்களுக்கு மிகவும் பொருத்தமான வகையில் பல்வேறு அறஞ்சார்ந்த  கருத்துகளையும் வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான படிப்பிணைகளையும் வழங்கிவருகின்றது.

இவ்வாறு, குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் படைக்கப்படும் இலக்கியங்கள் படைப்பாளருக்கும் வாசகர்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் வாசகர்கள் படைப்பாளர்களின் நோக்கத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன. இதனால் செய்யுள்களில் பெரும்பாலும் அழகியல்  (aesthetic); கருத்தியல் (factual) சார்ந்த ஆய்வுகளே அதிகம் இடம்பெறுகின்றன. இதற்கு  அப்பால் அறிவுநிலை சார்ந்த ஆய்வுகள் மிகவும் அரிதாகவே அமைந்துள்ளன. இச்சிக்கலை அடிப்படையாகக் கொண்டு மூதுரை பாடல்களில் காணப்படும் அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிந்தனைத் திறன் புதைந்து கிடக்கிறது. அவை ஆக்கச் சிந்தனை, ஆய்வுச் சிந்தனை என்று வகைப்படுத்தலாம். ஒரு பொருளை இன்னொன்றோடு ஒப்பிட்டு; தொடர்புபடுத்திப் பார்க்கும் திறன் ஆக்கச் சிந்தனையில் ஒன்றாக அமைகிறது. அடுத்து ஒரு விடயத்தை ஆராய்ந்து அதன் விளைவுகளைக் கண்டறிவதும் நன்மை தீமைகள் அறிந்து கொள்வதும் ஆய்வுச் சிந்தனையாக விளங்குகிறது. அவ்வகையில் மூதுரை பாடல்களில் அமைந்துள்ள உவமையணிகள் வழி வெளிப்படும் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும் தொடர்ந்து காண்போம்.

மூதுரைப் பாடல்களில் உவமையணிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கருத்தையோ பொருளையோ எளிமையாக விளக்கிப் புரிய வைப்பதற்கு அந்தக் கருத்தோ பொருளோ தொடர்பான பொருளன்றி வேறொரு பொருளைக் கொண்டு விளக்கும்பொழுது படிப்போர் அல்லது கேட்போர் எளிதில் புரிந்துகொள்ள விழைகிறது. அதாவது பயன்படுத்தப்படும் உவமையானது ஒருவர் கூறவரும் கருத்தை வெளிபடுத்தும் இயல்பைக் கொண்டிருக்கும். இதனை மூன்று படிநிலைகளில் காணலாம்: முதலாவது: இரண்டு பொருளையும் ஒப்பு நோக்குதல். இரண்டாவது: இரண்டு பொருள்களிலும் உள்ள ஒத்த தன்மையை அடையாளம்                                                                                                        காணுதல். மூன்றாவது : இரண்டு பொருளையும் தொடர்புபடுத்துதல். தொடந்து மூதுரையில் இடம்பெற்றுள்ள உவமைகளில் சிலவற்றைக் காண்போம்.

இளநீர் காய் வழியாக இளநீரைப் பெற்றாலும் வேர்தான் அதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. அதுபோன்று ஒருவருக்குச் செய்த உதவி பிறிதொரு வேளையில் நமக்கு நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும். இங்கு உதவி எனும் கருத்தை வெளிப்படுத்துவதற்கு தென்னை உவமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து, நல்லவருக்குச் செய்யும் உதவி கல் மேல் எழுத்துக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கல்லில் பொறிக்கபட்ட எழுத்து நிலையாக இருப்பது போன்று நல்லவர்களுக்குச் செய்யும் உதவியை எளிதில் மறந்து விட மாட்டார்கள். மாறாக, கருணையில்லாதவர்களுக்குச் செய்யும் உதவி நீர் மேல் எழுத்து நீர்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அது உடனே களைந்துவிடும். அதுபோல் கருணையில்லாதவர்களுக்குச் செய்யும் உதவியை எளிதில் மறந்து விடுவார்கள்.

தொடர்ந்து, முதுமையில் கிடைக்கும் செல்வமானது கொண்டாட்டமற்ற நாளில் பூத்தப் பூவுக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது, கொண்டாட்டம் இல்லாத நாள்களில் பூக்கின்ற பூக்களால் எந்தவொரு பயனும் இல்லை அதுபோன்று முதுமையில் செல்வம் வந்து சேர்ந்தாலும் அதனை அனுபவிப்பதற்கு அந்த முதுமை துணைநிற்காது. ஆகையால் அந்தச் செல்வத்தால் பயன் இருக்காது என்பது இதன்வழி அறியமுடிகிறது.

அடுத்ததாக, மானம் உள்ளவர்கள் கற்றூணுக்கு இணையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, பாரத்தை ஏற்றால் கற்றூண் உடையுமே தவிர வளையாது அதுபோன்று மானம் உள்ளவர்கள், அவர்கள் மீது பழி ஏற்பட்டால் உயிரை விடுவார்களே அன்றி தன்னுடைய கடமை அல்லது கொள்கையிலிருந்து விலகி அணுசரித்துப் போக மாட்டார்கள் எனும் செய்தி மேலோங்கி நிற்கிறது.

நல்லவருக்காகக் கிடைக்கப்பெறும் நன்மையை விளக்குவதற்கு நெல்லுக்குப் பாய்ச்சும் நீருக்கு உவமைப்படுத்தப்படுகிறது. நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் புல்லுக்கும் பயனைத் தரும். அதுபோன்று நல்லவருக்காகக் கிடைக்கப்பெறும் நன்மையால் மற்றவர்களும் பயனடைவர் என்பது இதன்பொருளாகக் கொள்ளலாம்.

அடுத்ததாக, படிக்கத் தெரியாதவரையும் பிறர் மனதை அறிந்து கொள்ளாதவனையும் மரத்திற்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளன. மரத்தினிடையே அறிவாற்றலை எதிப்பார்க்க முடியாது. அதுபோன்று படிக்காதவனிடத்தில் அறிவாற்றலை எதிர்ப்பார்க்க முடியாது. மேலும்,  மரத்திற்கு எப்படி உணர்ச்சி/உணர்வு இல்லையோ அதுபோன்று பிறர் மனதை அறிந்து கொள்ள முடியாதவர்கள் மரம் போன்று இருப்பர்.

இவ்வாறாக, கடவுள் வாழ்த்து நீங்கலாக முப்பது மூதுரை பாடல்களில் மொத்தம் 27 (90%) பாக்கள் உவமையணிகளைக் கொண்டிருக்கிறது. இந்த உவமையணிகள் பயன்பாடு தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களையும் வாழ்வியல் நெறிகளையும் படம் பிடித்துக் காட்டவல்லது. மூதுரையில் இடம்பெற்றுள்ள இருபத்தேழு பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பயன்பாடு குறிப்பிட்ட சில பொருண்மைகளை உணர்த்துகின்றது. மேலும், தமிழர்களின் சிந்தனையும் அவர்களின் பண்பாட்டு விழுமியங்களும் மிகவும் தெளிவாக மூதுரைகளில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இதனை மூதுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பயன்பாட்டின் வாயிலாக மிக துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. முப்பது மூதுரைகளில் கல் (4), நீர் (6), பூக்கள் (6), மங்கை (1), பால் (1), சங்கு (1), மரம் (7), நெல் (3), பறவை (7), விலங்கு (4), குடம் (4), நோய் (1), மலை (1), மருந்து (1), தங்கம் (1), பிணம் (1) ஆகியவை உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வோர் உவமையும்  குறிப்பிட்ட பாடல்களில் வெவ்வேறு சூழலில் பொருண்மையை வேறுபடுத்திக் காட்டியுள்ளது. இதன்வழி பொருண்மை விரிவாக்கத்தை வாசகர்கள் தங்கள் அறிவுப்புலனுக்கு ஏற்றாற்போல் விளங்கிக் கொண்டு புதிய பொருண்மையை வழங்க முனைகின்றனர். இதன்வாயிலாக அவர்களின் சிந்தனைத் திறன் மேலோங்குகிறது. இன்னும் ஆழமாக நோக்கினால் ஒரு பொருளை இன்னொரு பொருளோடு ஒப்பிட்டு அதனைத் தொடர்புபடுத்தி, அதன் ஒற்றுமையையும் வேற்றுமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிந்தனைத் திறனுக்கான பயிற்சியாக இது அமைகிறது. அதன் அடிப்படையிலேயே சிந்தனைத் திறன் மேலோங்குகிறது; அறிவாற்றலும் செம்மையுறுகின்றது.

மூதுரை பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமை (பொருள்) எவ்வாறான விளைவை ஏற்படுத்தவல்லது என்று ஆராய்ந்தறியும் திறன் மனிதனின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றது. மூதுரை பாடல்களில் 16 வகை உவமைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் மொத்தம் 40 உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 21 நேர்முறை விளைவுகளையும் 18 எதிர்மறை விளைவுகளையும் 1 மட்டும் இரண்டும் கலந்த விளைவுகளாக அமைந்துள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள உவமை எவ்வாறான விளைவைக் கொடுக்கவல்லது என்பதை அறிந்து கொண்டு மனித செயல்பாட்டின் எதிர்வினை எவ்வாறான விளைவை ஏற்படுத்துகின்றது என்பதையும் அறிய முற்படும்போது மனிதனின் அறிவாற்றல் மேலோங்கி நிற்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஒரு பொருளின் தன்மை எவ்வாறு முரணான விளைபயனைக் கொடுக்கவல்லது என்ற சிந்தனையும் ஆய்வுச் சிந்தனைக்கு வழிவகுக்கின்றது. மூதுரை பாடல் 12, 20 & 23 ஆகிய பாடல்களில் உவமையணிகள் முரண் அணியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது பெரியது எனும் சொல்லை மனித அறிவு நேர்முறை பொருண்மையாகவே அறிய விழைகிறது.    சிறியது’  எனும் சொல்லை எதிர்மறை பொருண்மையாக அறிய விழைகிறது. ஆனால் இப்பாடலில் இச்சொற்களின் விளைவோ முரணான பொருண்மையைக் கொடுக்கிறது. அதாவது பெரிய அளவு கொண்ட தாழம்பூ வாசம் இல்லாதது. ஆனால் சிறிய அளவு கொண்ட மகிழம்பூ வாசம் நிறைந்தது. அடுத்து மிகவும் அருகில் இருக்கும் பொருள் எப்போதுமே நேர்முறை விளைவைக் கொடுக்கும் என்பதற்கில்லை. அது எதிமறையான விளைவைக்கூட கொடுக்கலாம். அதாவது மிக அருகில் நம்மோடு இருக்கும் ஒன்று பொதுவாக நேர்முறையான ஒன்றே ஆனால் அது எப்போதும் நன்மையாக அமைந்துவிடாது எடுத்துக்காட்டாக நோய். நம்மோடு இருந்தாலும் அதன் விளைவு பாதிப்பைத் தரவல்லது. அதுவே தூரத்தில் இருக்கும் மலை, நம்மைவிட்டு விலகியிருந்தாலும்; தூரத்திலிருந்தாலும் அங்கிருந்து கிடைக்கபெறும் மருந்து நமக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து உறுதியான ஒரு பொருளை நேர்முறையாகவும் மென்மையான ஒரு பொருளை எதிர்மையாகவும் மனித அறிவு பார்க்கிறது. கல் உறுதியான பொருள்தான். ஆனால் இன்னொரு கடுமையான பொருள்கொண்டு அடிக்கும்போது உடைந்து தூள்தூளாக நொறுங்கி விடுகிறது. மீண்டும் அதனை இணைப்பதற்குச் இயலாது. ஆனால் மென்மையான உலோகம் பொன், அதனை அடித்து நொறுக்கினாலும் மீண்டும் உருக்கி இணைத்து விடலாம். அதன் மதிப்புக் குறைந்து விடாது. ஆக அந்த அடிப்படையில் குறிப்பிட்ட இதன் செயல்பாடு நேர்முறை விளைவைக் கொடுக்கவல்லது. இப்படி ஒவ்வொரு பொருளையும் ஒப்பிட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது மனிதனின் சிந்தனைத் திறன் வலுபெறுகின்றது; அறிவாற்றல் வளர்ச்சி பெறுகின்றது. இவ்வாறு ஒற்றுமை வேற்றுமைகளை அறியும் பொருட்டுப் பகுப்பாய்வு (analysis) செய்கின்றனர். இவ்வாறான பகுப்பாய்வானது சிந்தனைத் திறன் வகைகளில் மேல்நிலை சிந்தனைத் திறனாகக் கருதப்படுகிறது. இப்படித் தொடர்புபடுத்தி பார்ப்பது ஆக்கச் சிந்தனையின் கூறுகளில் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்றது (Kao, 2020).  மேலும்  இதுபோன்ற பயிற்சிகள் (தொடர்புபடுத்திப் பார்த்தல்) சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கின்றது.

ஆக, ஆக்கச் சிந்தனையும் ஆய்வுச் சிந்தனையும் சிந்திக்கும் ஆற்றலே தவிர அறிவாற்றல் என்பது கிடையாது. ஆகையால் யாவரிடமும் சிந்திக்கும் திறன் புதைந்து கிடக்கிறது. புதுப் புது கருத்துகள் உருவாகுவதற்கும் புதியக் கோணத்தில் சிந்தித்துச் செயல்படுவதற்கும் இந்தச் சிந்தனைத் திறன் இன்றியமையாததாக அமைகிறது. இதனைத் மூதுரை போன்ற இலக்கியப் படைப்புகளில் ஆராய்வது; அதன்வழி சிந்தனைத் திறன் வளர்ச்சியைப் பெற முயல்வது தமிழ்மொழி; தமிழ் இலக்கியங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பது திண்ணம்


ஆக்கம், முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் - மலாயாப் பல்கலைக்கழகம்


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *