‘பாரதி’ திரைப்படப் பாடல்கள்!

top-news
FREE WEBSITE AD

தமிழ்ச் சிந்தனை மரபில் கவிதை என்பது உணர்வுகளை மட்டுமல்ல, சிந்தனைத் திறனையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டதாகும். மகாகவி பாரதியாரின் பாடல்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன. குறிப்பாக பாரதிதிரைப்படப் பாடல்களில் இடம்பெறும் வினாக்கள், வகைப்பாடு, ஒப்பீடு, காரணகாரிய உறவுகள் மற்றும் கற்பனை கூறுகள் வாசகர்களின் அடிநிலை மற்றும் உயர்நிலைச் சிந்தனைத் திறன்களைத் தூண்டுகின்றன. இக்கட்டுரை, புளூமின் சிந்தனைப் படிநிலைகளின் அடிப்படையில் பாரதிதிரைப்படப் பாடல்களை ஆய்வு செய்து, அவை சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்பதை விளக்குகிறது.

வினாவழி சிந்தனைத் திறன்

தொடுக்கப்படும் வினாக்கள் வாயிலாக ஒருவருடைய சிந்தனையைத் தூண்ட இயலும். குறிப்பாகக் கேட்கப்படும் வினாக்களின் வகைகளுக்கேற்றவாறு ஒருவருடைய சிந்தனை துலங்குகிறது. அதாவது அடிநிலை சிந்தனைக்கான வினாக்கள் (Low Order Thinking Skills) என்றும் மேல்நிலை சிந்தனைக்கான வினாக்கள் (High Order Thinking Skills) (Bloom,1984) என்றும் இவற்றை வகைப்படுத்தலாம். இவற்றின் செயல்பாடுகளுக்கு வினாக்கள் மிகவும் துணைப்புரிகின்றன. வினாக்கள் ஒருவரைச் சிந்திக்கத் தூண்டி விடைகளைத் தேடி, அறிதலுக்கும் புரிதலுக்கும் புரிதலுக்கும் நகர வைக்கிறன. அவ்வகையில், ‘பாரதிதிரைப்படப் பாடல்களில் வினாக்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. இந்த வினாக்கள் அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பின் வெளிப்பாடாகக் காண முடிகின்றது.

இதன் அடிப்படையில்பாரதி திரைப்படப் பாடல்களில் இடம்பெற்றுள்ள வினாக்களளை ஒவ்வொன்றகாப் பார்ப்போம். பாரதி திரைப்படப் பாடல்களில் ஒன்றானது நிற்பதுவே நடப்பதுவே எனும் பாடலாகும். இந்தப் பாடலில் மொத்தம் 14 கேள்விகளை முன்கைக்கிறார் பாடலாசிரியர். அவை,  சொற்பனந்தானோ? பொருளில்லையோ? கனவோ? பொய்களோ? காண்பமன்றோ? மயக்கங்களோ? கானலின் நீரோ? பொய்தானோ? பொய்யாமோ? தொடர்ந்திடுமோ? மாயைகளோ? காட்சிப் பிழைதானோ? கோலமும் பொய்களோ? சேர்ப்பாரோ?

இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வினாக்கள் அனைத்தும் வினா எழுத்துகளான ஓகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. இந்த வினாக்கள் வாசகர்களைக் கருத்தூன்றி வாசித்து, கருத்தையோ தகவலையோ நன்கு அறிந்தும் புரிந்தும் கொள்ளும் சூழல் அமைகிறது. ஆழ்நிலை  வாசிப்பின்போது இது வாசகர்களைச் சிந்திக்கவும் தூண்டுகிறது. அறிவார்ந்த தேடலைத் தூண்ட வினாக்கள் பெரிதும் துணைப்புரிகின்றன என்பதற்கு இது சான்றாக அமைகிறது.  

 

பகுப்பாய்வு திறன்

புளூமின் சிந்தனைப் படிநிலை 4, பகுப்பாய்வாகும். இது உயர்நிலைச் சிந்தனையாகும். வழங்கப்பட்டிருக்கும் பல்வகை தகவல்களை வகைப்படுத்தி (categorize), அதை ஒப்பீடு செய்து வேறுபடுத்தி (compare and contrast), ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய உயர்நிலை சிந்தனை பெரிதும் துணைப்புரிகின்றது. அவ்வகையில், பாரதி திரைப்படப் பாடலில் பகுப்பாய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு வகைப்பாட்டுக் கூறுகள் categorization’ பின்வருமாறு இடம்பெற்றுள்ளன.

பாரதி திரைப்படப் பாடல்களில் இடம்பெற்றுள்ள வகைப்பாட்டுக் கூறுகளைத் தொடர்ந்து காண்போம்நிற்பதுவே - நிற்கும் இயல்புடைய உயிரினங்கள், நடப்பதுவே - நடக்கும் இயல்புடைய உயிரினங்கள், பறப்பதுவே - பறக்கும் இயல்புடைய உயிரினங்கள். பகுப்பாய்வு திறனை ஊக்குவிக்க வகைப்பாட்டுக் கூறுகள் பெரிதும் பங்காற்றுகின்றன. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' எனும் வரியில் பாரதியார் உயிரினங்களை நேரடியாகக் கூறாமல், வகைப்படுத்திக் காட்டியுள்ளார். வாசகர்கள் இதைப் படிக்கும்போது அதை உள்வாங்கி, கவிஞர் குறிப்பதைப் பகுப்பாய்வு (decode) செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது நிற்பது என்ற வகைப்பாட்டில் நிற்கும் இயல்புடைய உயிரினங்கள் யாவை என்பதையும் நடப்பது என்ற வகைப்பாட்டில் நடக்கும் இயல்புடைய உயிரினங்கள் யாவை என்பதையும் பறப்பது என்ற உயிரினங்கள் யாவை என்பதையும் பிரித்து விவரித்துப் பார்க்க வேண்டிய சூழல் அமைந்துள்ளது. ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் ஏற்ற உயிரினங்களை வாசகர் சிந்தித்துப் பார்க்கும் நிலையும் பட்டியலிட்டுப் பார்க்கும் நிலையும் ஏற்படுகின்றது. இதற்கு, அறிவார்ந்த உயர்நிலைச் சிந்தனை முக்கியமாகும். அடுத்ததாக 'காண்பதுவே உறுதிகண்டோம், காண்பதல்லால் உறுதியில்லை' எனும் வரியில், உறுதியானவை பார்வைக்கு எட்டியவையே, உறுதியற்றவை பார்வைக்கு எட்டாதவை என்று வகைப்படுத்தி, பகுத்துக் கூறப்பட்டுள்ளது. இதில் பார்வைக்கு எட்டிய பொருள்கள் யாவை என்ற பட்டியலிடுவதையும் பார்வைக்கு எட்டாத பொருள்கள் யாவை என்பதனையும் பட்டியலிட்டுப் பார்க்கும் நிலையும் ஏற்படுகிறது. ஆக, இவ்வாறான பாடல்வரிகளை வாசிக்கும் போதும் கேட்கும் போதும் ஆராய்ந்து பார்க்கும்போதும் வாசகர்கள் பகுப்பாய்ந்து உட்பொருளை உள்வாங்கும் நிலை ஏற்படுகின்றது.


ஒப்பிடும் திறன் 

புளூமின் சிந்தனைப் படிநிலையின்படி ஒன்றை இன்னொன்றோடு ஒப்பீடு செய்து, ஒற்றுமை வேற்றுமை கண்டறிவது, புரிதலை மேலோங்கச் செய்கிறது. இது உயர்நிலை சிந்தனையின் வெளிப்பாடாக அமைகிறது.  உன் கடல் மெல்லிசை பாடுமே எனும் பாடல் வரி, கடலின் அலை மெல்லிசையோடு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மெல்லிசை என்பது மென்மையான இசை என்பதுபோல் கடல் மென்மையான தன்மை கொண்டிருக்கிறது என்பது கடலலை சீற்றம் இல்லாது சீராக இருக்கிறது என்பது புலப்படுகிறது. புதைநிலையில் இந்தக் கருத்தானது இயற்கைப் பேரிடர் இல்லாது இருக்கும் நாடாக அல்லது பகுதியாக அந்த இடம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் வளமும் மறைமுகமாக விளக்கப்படுகிறது. அதாவது கடல் சீற்றம் இல்லாத நிலையில் மீனவர் தொழிலுக்கும் சுற்றுலாத் துறைக்கும் உகந்த இடமாக இது அமைவதையும் வாசகர்கள் அறிந்து கொள்ள முடிகிறது.   இவ்வாறான ஒப்பீட்டின் மூலம், ஒரு சூழலைப் பற்றிய புரிதல் கூடுகிறது. இதற்கும், அறிவார்ந்த சிந்தனைக்கும் பெரிதும் தொடர்புள்ளது.

 

காரண காரியம் அறிதல்

ஒரு காரியமும், அது நிகழ்வதற்கான காரணத்தையும் புரிந்துகொள்ளும் பக்குவம் உயர்நிலையைப் பிரதிபளிக்கும். ஒரு செயலுக்கான காரணத்தை அறிந்து கொள்வதும் அதன் விளைவை அறிந்து கொள்வதும் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு உந்துதலாக அமைகிறது. 'சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்' எனும் பாடல் வரியில் காரண காரியம் இடம்பெற்றுள்ளது.

இதில், விதைகளிலிருந்துதான் மரங்கள் வளர்கின்றன என்றும், மரங்களிலிருந்துதான் சோலைகள் உருவாகின்றன என்ற தகவலும் இடம்பெற்றுள்ளன. விதைகள் இல்லாவிடின், மரங்கள் இருக்காது, மரங்கள் இல்லாது, சோலைகள் இருந்திருக்காது என்ற கருத்து இங்குப் பதிவு செய்யப்படுகிறது. இது ஒரு தொடர்பைப் பிரதிபளிக்கிறது. அதாவது காரணம் இல்லாமல், காரியம் ஏற்படாது என்பதை இந்த வரியின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இது அனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு உந்துதலாக அமைகிறது.

கற்பனைத் திறன்

சிந்தனைத் திறனில் அடுத்ததொரு பரிணாமம் காட்சிப்படுத்துதல் ஆகும். அதாவது ஒரு சூழலையோ கருத்தையோ விளங்கிக் கொள்வதற்கு ஒரு காட்சியாகக் கொண்டுவருதல். நடைமுறை வாழ்க்கையில் எந்த நிலையில் உள்ள மக்களும் படித்துக் கூறவருகின்ற கருத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்

அந்த வகையில் பாரதிதிரைப்படப் பாடல்களில் இடம்பெற்றுள்ள கற்பனைக் கூறுகளை கீழ்க்காணும் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி

எனும் பாடல் வரிகள் வீட்டில் வெள்ளை நிறத்திலிருக்கும் பூனைக்கு சாம்பல், கருஞ்சாந்து, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் குட்டிகள் உள்ளன என்பதனைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

இவ்வாறான பாடல்வரிகள் வாசகர்களின் கற்பனைத் திறனை (imagery) வளப்படுத்தி, காட்சிப்படுத்த தூண்டுகிறது. மேற்கண்ட பாடல் வரிகளில் வீட்டில் வளருகின்ற பூனையை வாசகர்களின் மனக்கண்முண் கொண்டு அதனை அப்படியே காட்சிப்படுத்தும் சூழல் அமைந்துள்ளது. இதன்வாயிலாக வாசகனின் காட்சிப்படுத்தும் திறன் வளப்படுத்தப்படுகிறது. இது அடுத்தக்கட்ட சிந்தனையின் வளர்ச்சியைக் குறிக்கின்றது. வாசிக்கும் ஒன்றைக் கண் முன்னே காட்சிப்படுத்தும் திறன் ஓர் உயர்நிலைச் சிந்தனைத் திறனாகும்.

ஆக, ஆக்கச் சிந்தனையும் ஆய்வுச் சிந்தனையும் சிந்திக்கும் ஆற்றலே தவிர அறிவாற்றல் என்பது கிடையாது. ஆகையால் யாவரிடமும் சிந்திக்கும் திறன் புதைந்து கிடக்கிறது. புதுப் புது கருத்துகள் உருவாகுவதற்கும் புதியக் கோணத்தில் சிந்தித்துச் செயல்படுவதற்கும் இந்த சிந்தனைத் திறன் இன்றியமையாததாக அமைகிறது. இதனைத் பாரதியாரின் கவிதைகள் போன்ற இலக்கியச் செல்வங்களில் ஆராய்வது; அதன்வழி சிந்தனைத் திறன் வளர்ச்சியைப் பெற முயல்வது தமிழ்மொழி; தமிழ் இலக்கியங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி ஆகும்.


ஆக்கம், முனைவர் செல்வஜோதி இராமலிங்கம், மலாயாப் பல்கலைக்கழகம்


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *