“பாரதிராஜாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது” – உருக்கமாக பேசிய தங்கை பாரதி
- Surendran Sumdraraj
- 11 Jun, 2026
தேனி, ஜூன் 11 –
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது தங்கை பாரதி தனது அண்ணனின் நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தேனி அல்லிநகரத்தில் உள்ள குடும்ப இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் அண்ணனின் இயற்பெயர் சின்னச்சாமி. ஆனால் வீட்டில் அனைவரும் அவரை ‘பால்பாண்டி’ என்றுதான் அன்போடு அழைப்போம். என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். சிறுவயதில் மிகவும் அன்பாக கவனித்துக் கொள்வார். அதே நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கண்டிப்பார்,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், இளம் வயதிலேயே நாடகங்களின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும், “சென்னைக்கு செல்லும் முன் எப்படியாவது சாதித்து காட்டுவேன்; சாதிக்காமல் ஊருக்கு திரும்ப மாட்டேன்” என்று உறுதியுடன் கூறியதை நினைவுகூர்ந்தார். அந்த வார்த்தையை இறுதிவரைக் காப்பாற்றியவர் பாரதிராஜா என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
“அவருடைய முதல் திரைப்படம் வெளியானபோது எங்கள் குடும்பமே பெருமையுடன் கொண்டாடியது. இன்று அவர் எங்களுடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு,” என்று கண்ணீர் மல்க பேசிய பாரதியின் உரை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



