சபா புதிய அமைச்சரவை: தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பித்தது
- Tamil Malar (Reporter)
- 01 Dec, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
பாகான் டத்தோக், டிச. 1-
சபா மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் மந்திரி, துணை மந்திரி பதவிகளுக்கு தேசிய முன்னணி தனது வேட்பாளர்கள் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தினார்.
சபா மாநில அரசு, ஆட்சிக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளிடமும் வேட்பாளர்கள் பட்டியலை சமர்ப்பிக்கக் கோரியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசை விரைவில் அமைக்க வேண்டும். சபா மக்கள் கூட்டணி தவிர மற்ற கட்சிகளுடனும் சிறப்பான ஒத்துழைப்பு நிலவுகிறது. அதை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.
நானே புதிய முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூரையும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் தொடர்பு கொண்டு சபாவில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி வருகிறேன்” என்று ஸாஹிட் கூறினார்.
இன்று பாகான் டத்தோக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் குறித்த சுருக்கமான விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சபாவில் புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அமைச்சரவை இடங்கள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



