மருத்துவத் துறையில் ஒரு சாதனை - சுவீடன் விஞ்ஞானிகள் சாதனை!

top-news
FREE WEBSITE AD

அறிவியல் தொடர்பான  திரைப்படங்களில் வருவதுபோல, நமது தோலின் மீதே சர்க்யூட்ஸ் (Circuits) வரைந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அதுபோல சுவீடனின் லிங்கோபிங் மற்றும் லண்ட் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் இதனை நிஜமாக்கியுள்ளனர். நச்சு ரசாயனங்கள் இல்லாமல், வெறும் சாதாரண ஒளியைப் பயன்படுத்தி எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை உருவாக்கும் புதிய முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக பிளாஸ்டிக் மின்சாரத்தைக் கடத்தாது என்பது நமக்குத் தெரியும். ஆனால், உலோகத்தைப் போலவே மின்சாரத்தைக் கடத்தும் 'கடத்தும் பிளாஸ்டிக்குகளை' (Conductive Plastics) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை உலோகங்களைப் போல கடினமாக இல்லாமல், பிளாஸ்டிக்கைப் போல வளையும் தன்மை கொண்டவை. இவ்வளவு நாள் இந்த பிளாஸ்டிக் மின்சுற்றுகளை உருவாக்க மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயனங்கள் தேவைப்பட்டன. இதனால் அவற்றை மனித உடலில் பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தது.

விஞ்ஞானிகள் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு சிறப்பு திரவத்தை உருவாக்கியுள்ளனர். இந்த திரவத்தின் மீது லேசர் அல்லது சாதாரண ஒளியைப் பாய்ச்சினால், ஒளி படும் இடம் மட்டும் உடனடியாக மின்சாரத்தைக் கடத்தும் மின்முனையாக (Electrode) மாறிவிடும். இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய மந்திரமே இதுதான். நீங்கள் இந்தக் கரைசலை எங்கு வேண்டுமானாலும் பூசலாம்.

கண்ணாடி மீது பூசி சர்க்யூட் வரையலாம். துணிகள் மீது பூசி 'ஸ்மார்ட் உடைகளை' உருவாக்கலாம். ஏன், மனிதத் தோலின் (Skin) மீது பூசி நேரடியாக சென்சார்களை உருவாக்கலாம். வேலை முடிந்ததும், மீதமுள்ள திரவத்தை வெறும் நீரால் கழுவிவிடலாம்.

இந்த மின்முனைகளை எலிகளின் தோலில் நேரடியாகப் பொருத்தி விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். ஆச்சரியப்படும் விதமாக, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் வழக்கமான உலோக மின்முனைகளை விட, இவை மூளையின் சமிக்ஞைகளை மிகத் துல்லியமாகப் படம்பிடித்தன.

விலையுயர்ந்த இயந்திரங்கள் தேவ இல்லை. நச்சு ரசாயனங்கள் இல்லாததால் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. உடலில் அணிந்து கொள்ளக்கூடிய மெல்லிய சென்சார்கள் மூலம் இதயத் துடிப்பு, மூளைச் செயல்பாடு போன்றவற்றை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கலாம். இது எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் ஒரு மிகப்பெரிய மைல்கல். மிகவும் எளிமையான முறையில் எதிர்கால கருவிகளை உருவாக்க இது வழிவகை செய்யும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *