கோலாலம்பூர், பிப் 10: அம்னோ கட்சியில் இருந்து
விலகிய முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் சேர விரும்பினால் அவர்களை
வரவேற்க அம்னோ தயாராக இருப்பதாக, கட்சித் தலைவர் அஹமட்
ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சியில்
இருந்து நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் அதன் துணைத் தலைவர் ஹம்சா
ஸைனுடின் உட்பட, முன்னாள்
உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்பு திறந்துள்ளதாக அவர் கூறினார்.
ருமாஹ் பங்க்சா என்ற
முன்முயற்சி மூலம், தனிநபர்களாகவோ அல்லது
குழுவாகவோ அம்னோவில் மீண்டும் இணைய விரும்புபவர்களுக்கு திறந்த மேடையாக இது
செயல்படுகிறது என ஜாஹிட் தெரிவித்தார்.
மலாய் சமூகத்தின்
நலனுக்காக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அம்னோ அவர்களுக்கான கட்சி என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பெர்சாத்து கட்சித் தலைவர் முகைதீன் யாசின்
மற்றும் ஹம்சா ஸைனுடின் இடையிலான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில்,
ஹம்சாவுக்கு எதிரான ஒழுக்க நடவடிக்கைகள்
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன!