செஸ் ஒலிம்பியாட்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
சமர்கண்ட், செப். 17-
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் தொடங்கிய 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றியுடன் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளன. ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்கின்றன. மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன.
ஓபன் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, தாய்லாந்தை எதிர்கொண்டது. உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், தாய்லாந்தின் பேரிஸ் ரஷித் அல்ரியாமியை எதிர்த்து விளையாடினார். வெள்ளை காய்களுடன் ஆடிய குகேஷ் 37-ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நிஹால் சரின் மற்றும் விதித் குஜராத்தி ஆகியோரும் வெற்றி பெற்றனர். அதேவேளை, அர்ஜூன் எரிகசி தனது ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல் சுற்றில் ஓய்வு அளிக்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் இந்தியா, டொமினிக்கன் குடியரசை 4-0 என்ற கணக்கில் அபாரமாக தோற்கடித்தது. தமிழக வீராங்கனைகளான வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். கோனெரு ஹம்பி மற்றும் வந்திகா அகர்வாலும் வெற்றியைப் பதிவு செய்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



