PN கூட்டணியின் செயல்பாடுகள் இடைநிறுத்தம்! ROS அதிரடி அறிவிப்பு!
- Shan Siva
- 24 Sep, 2026
கோலாலம்பூர், செப் 24: பெர்சாத்து (Bersatu) கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கோரி நோட்டீஸ்
அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சங்கங்களின் பதிவிலாகா
(RoS) பெரிகாத்தான் நேஷனல் (PN)
கூட்டணியின் செயல்பாட்டை இடைநிறுத்தியுள்ளது.
நேற்று முதல்
அமலுக்கு வந்த இந்த இடைநிறுத்த நடவடிக்கை, அமைப்பின் நலன்களைப் பாதுகாக்கவும், அதன் விதிகளைத் தொடர்ந்து மீறுவதைத் தடுக்கவும் எடுக்கப்பட்டதாக RoS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நோட்டீஸ் PN-இன் பதிவை ரத்து செய்வதற்கான முடிவு அல்ல
என்பதை அது வலியுறுத்தியது.
செப்டம்பர் 22
தேதியிட்ட 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 13(2)-இன் கீழ் இந்த
இடைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், பதிலளிக்க PN-க்கு நியாயமான
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் RoS கூறியது.
சமூக ஊடகங்களில் RoS-இன் அறிவிப்பு என்று கூறப்படும் ஒரு தகவல்
பரவியதைத் தொடர்ந்து PN-இன் நிலை குறித்த
கேள்விகள் எழுந்த மறுநாளே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதிவிலாகாவிடம் விளக்கங்களைச்
சமர்ப்பிக்க PN தலைவர் அஹ்மத்
சம்சுரி மொக்தாருக்கு 30 நாட்கள் அவகாசம் அந்த அறிவிப்பில் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இதற்கிடையில்,
அந்த அறிவிப்பு உண்மையானது என்றும், PN பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் மற்றும்
கூட்டணியின் பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இது குறித்துத்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பெர்சாத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பின்னர்,
PN-க்கு அனுப்பப்பட்ட RoS
கடிதத்தின் நகல் தங்களுக்குக் கிடைத்ததை பெர்சாத்து
பொதுச் செயலாளர் அஸ்மின் அலி உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், துறை வெளியிடும்
அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பார்க்குமாறும், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஊகங்கள் அல்லது
சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் RoS இன்று அனைத்துத் தரப்பினரையும்
கேட்டுக்கொண்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



