வடகொரியா எல்லைகளில் பிரம்மாண்டமான ராணுவப் பயிற்சியில் அமெரிக்கா!
- Muthu Kumar
- 10 Mar, 2026
மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்கா தனது கவனத்தை ஆசிய கண்டத்தின் பக்கம் திருப்பியுள்ளது.வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், தென் கொரியாவுடன் இணைந்து 'ஃப்ரீடம் ஷீல்ட்' (Freedom Shield) என்ற பிரம்மாண்டமான ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது, உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ராணுவப் பயிற்சி மார்ச் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தென் கொரியாவின் 18,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். கணினி வழிப் போர்க்களப் பயிற்சிகள் மற்றும் நேரடித் தரைப்படைப் பயிற்சிகள் என இரு கட்டங்களாக இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மும்முரமாக இருக்கும் இந்த நேரத்தில், ஆசியாவில் இத்தகைய ராணுவ நகர்வு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் இத்தகைய கூட்டுப் பயிற்சிகளை, எப்போதும் 'போருக்கான ஒத்திகை' என்றே வடகொரியா விமர்சித்து வருகிறது. சமீபத்தில் வடகொரியா தனது ஏவுகணைச் சோதனையைத் தீவிரப்படுத்திய நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை, கிம் ஜாங் உன்னின் போக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது.
ஒருபுறம் ஈரான் மீதான தாக்குதல், மறுபுறம் வடகொரியா எல்லைகளில் ராணுவப் பயிற்சி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரே நேரத்தில் இரு முனைகளில் தனது ராணுவ ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். இது குறித்து அமெரிக்கா, "இது முற்றிலும் தற்காப்பு சார்ந்த பயிற்சி மட்டுமே" என்று கூறி வந்தாலும், சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள், அமெரிக்கா தனது உலகளாவிய ராணுவத் தளவாடங்களை மறுசீரமைப்பதற்கான முன்னேற்பாடாகவே இதைக் கருதுகின்றனர்.
மேலும் ஈரான் போரினால் ஏற்கனவே உலகமே பதற்றத்தில் இருக்கும் நிலையில், வடகொரியா இதற்கு என்ன மாதிரியான எதிர்வினையை ஆற்றப்போகிறது என்பதே தற்போதைய உலக நாடுகளின் பெரும் கவலையாக உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



