அன்வாருக்கு டி.ஏ.பி நெருக்குதல்! கசிந்தது லிம் குவான் எங்கின் கடிதம்!
- Thinagaren Sanggaren
- 15 Dec, 2025
டிசம்பர் 15,
டி.ஏ.பி கட்சி அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்தாலும் தற்போது அன்வார் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் முக்கியமான ஒரு சில முடிவுகளில் அன்வார் முறையாகச் செயல்படவில்லை என்றும் டி.ஏ.பி கட்சியின் முன்னாள் தலைவரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதிய கடிதம் கசிந்துள்ளது. அக்கடிதத்தில் பிரதமராக இருக்கும் அன்வாருக்கு 10 கோரிக்கைகளை முன் வைத்ததுடன் முக்கிய கோரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அன்வார் மீறியிருப்பதால் மக்களிடையே பெரும் அதிருப்தியை டி.ஏ.பி எதிர்நோக்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்வாருக்கு டி.ஏ.பி முன்வைத்திருக்கும் கோரிக்கை சமூக ஊடகங்களில் கசிந்ததும் லிம் குவான் எங் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அக்கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2022 நடைபெற்ற பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியிருக்கிறது. இதனால் பக்காத்தான் ஆதரவாளர்களிடையே நிலவும் அதிருப்திக்குக் கூட்டணி கட்சிகளின் கடைநிலை தலைவர்கள் மக்கள் குறைகளைக் கேட்டாலும் அவர்களுக்கான தீர்வை வழங்க முடியவில்லை என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, அரசாங்கத்தின் பூமிப்புத்ரா சலுகைகளில் டி.ஏ.பிக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் நாம் வாக்குறுதி அளித்தபடி பூமிப்புத்ரா அல்லாதவர்களுக்குக் குறைந்தபட்ச 10% சலுகைகளை நாம் அமல்படுத்த வேண்டும். அப்படி எனில் நமது வாக்குறுதிகளை நாம் மறந்துவிட்டோம் என்கிற பழியைச் சுமக்க நேரிடும் என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக வணிகத்திற்கான சிறப்பு வரி எனப்படும் SST வரியைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். SST வரியை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பாலான உள்ளூர் வணிகர்கள் குறிப்பாகப் பக்காத்தான் ஆதரவாளர்களான உள்ளூர் வணிகர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைப் பிரதமர் அன்வார் உணர வேண்டும் என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காவதாக உள்நாட்டு உற்பத்தியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அரசு பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 50% பொருள்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பொருள்களை வாங்குவதை அரசாங்கம் உத்தரவாகப் பிரப்பிக்க வேண்டும் என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்தாவதாக, வரி விலக்கை விரைந்து அமல்படுத்தும்படியும், குறிப்பாக வரி தள்ளுபடிகளை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் அமல்படுத்தினால் மட்டுமே அடுத்த ஆண்டு சீன பெருநாளை அரசாங்கம் அங்கீகரிக்கும் ஒரு செயலாக மக்கள் நம்புவார்கள். வரி விலக்கை மீண்டும் பெறாத பெரும்பாலான தொழில் வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு குறைந்தபட்சமாக 20 பில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்படும் என்பதால் சிறப்பு நிதியாக 20 பில்லியன் ரிங்கிட் நிதியைப் பிரதமரான நீங்கள் வழங்க வேண்டுமென லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறாவதாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கடந்த அக்தோபர் மாதம் முதல் 2% KWSP வழங்கப்பட வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. இது பெரும்பாலான தொழில்துறைகளுக்குச் சவாலாகத் திகழ்வதால் இத்திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு மிக பெரிய பயனாக அமையும் என்றும் மேலும் 1 லட்சம் ரிங்கிட் வருமானத்தில் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளருக்கு 2% ஊழியர் வரி விதிப்பு என்பது தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அரசு நிறுவனங்களுக்கும் மிக பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் பிரதமர் அன்வார் புரிந்துக் கொள்ள வேண்டும் என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழாவதாக PERKESO எனப்படும் தொழிலாளர்களுக்கான காப்பீடுத் திட்டம் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் வழங்கப்படுகிறது. காப்பீடு வழங்காத நிறுவனங்கள் மீது 10,000 ரிங்கிட் வரையும் அபராதம் விதிக்கப்படுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு வழங்குவது அர்த்தமற்றது. பணியிடத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அபாயங்களுக்குக் குறிப்பிட்ட நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்கிற சட்டம் அமலில் இருப்பதால் மனிதாபிமானமற்று எந்தவொரு தனியார் நிறுவனமும் இழப்பீடு வழங்காமல் இருக்காது. ஆகையால் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான PERKESO எனப்படும் தொழிலாளர்களுக்கான காப்பீடுத் திட்டத்தை அரசு மீட்டுக்கொள்ள வேண்டும் என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டாவதாக சபா சரவாக் ஆகிய மாநிலங்களின் வருவாயிலிருந்து 40% அரசுக்கு வழங்குவது என்பதை அரசு கைவிட வேண்டும். சபா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் கடுமையான வீழ்ச்சிக்கு இந்த 40% வருவாய் பகிர்வு மிக பெரிய அளவில் காரணமாக விளைந்தது. மாநில உரிமைகளுக்கு எதிராக இது போன்ற சட்டங்களை அமல்படுத்துவது மாநில மக்களின் அடிப்படை உரிமையை அரசாங்கம் பறிப்பதற்குச் சமம். அப்படியான அரசாங்கத்தை எதிர்ப்பதாக நினைத்து சபா மக்கள் பக்காத்தான் கூட்டணியை எதிர்த்துள்ளனர் என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்பதாவதாக, SME எனப்படும் சிறு குறு வணிகர்கள் விலைப்பட்டியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் என்பது சாத்தியமற்றதாகவே கருதப்படுவதால் கட்டாய மின்-விலைப்பட்டியலை அரசுக்கு நீக்க வேண்டும். ஏனெனில் அன்றாட வாழ்வுக்காகப் போராடும் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதார நிலையும் அடிப்படை பொருள்களின் விலையும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பதை அரசாங்கம் உணர்ந்து இந்த கட்டாய மின்-விலைப்பட்டியலை நீக்க வேண்டும் என லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக, பத்தாவது கோரிக்கையாக SME எனப்படும் சிறு குறு வணிகர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் LHDN வரி அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இப்படி சிறு குறு வணிகர்களிடையே வசூலிக்கப்படும் வரிகளுக்கு முறையான தரவுகளும் ஆவணங்களும் இல்லை. இதனால் LHDN அதிகாரிகளால் திடீரென சிறு குறு வணிகர்கள் கைது செய்யப்படுவதும் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டும் வருகின்றனர். இதனால் சிறு குறு வணிகர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை விலக்கும்படியும் அதற்கு மாறாகச் சிறப்பு வரி விலக்கை அமல்படுத்தும்படியும் லிம் குவான் எங் அன்வாருக்கு எழுதியதாக நம்பப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள 10 கோரிக்கைகளைப் பிரதமரும் நண்பருமான அன்வார் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்வார் என தாம் நம்புவதாக லிம் குவான் எங் கையொப்பமிட்ட கடிதம் பலரின் அதிருப்தியையும் ஆதரவையும் பெற்று வருகிறது. அன்வாருக்கு டி.ஏ.பி முன்வைத்திருக்கும் கோரிக்கை சமூக ஊடகங்களில் கசிந்ததும் லிம் குவான் எங் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அக்கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



