துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜாக்கி’ என பெயர்
- Surendran Sumdraraj
- 14 Sep, 2026
சென்னை, செப். 14 –
நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்தார்.
அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் கபடி வீரராக நடித்த துருவ் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. இப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, துருவ் விக்ரமின் 4-ஆவது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



