விபத்தில் பலியான பள்ளி மாணவியின் வீட்டிற்குச் சென்று கல்வியமைச்சர் ஆறுதல்!
- Shan Siva
- 12 May, 2026
பத்து பஹாட், மே 12: கடந்த மே 5 ஆம் தேதி பள்ளிக்கு முன்பாக வேன் மோதி உயிரிழந்த எஸ்.கே ஶ்ரீ மைமோன் பள்ளிமாணவியின் குடும்பத்தினரை கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் நேற்று சந்தித்தார்.
பாரிட் சுலோங்கில், கம்போங் பாரிட் முஸ்தஃபாவில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு அவர் மாலை 5.30 மணியளவில் சென்றார். அங்கு உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களான 37 வயதான அஸ்மிலா துகிரான் மற்றும் 39 வயதான அஹ்மத் ஃபரீஸ் காலித் ஆகியொரை சந்தித்து தமது இரங்கலை தெரிவித்தார்.
ஃபத்லினா அங்கு சுமார் 30 நிமிடங்கள் செலவழித்து, குடும்பத்தினருக்கு பண உதவியையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.
மதியம் 12.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய வேன் மோதியதில் நூர் ஐனி உமைரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையில், சிறுமியின் தந்தை அஹ்மத் ஃபரீஸ், தனது மகளுக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், கல்வி அமைச்சகமும் மாநில கல்வித் துறையும், குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில், பாதுகாப்புக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்தும் என்று நம்புவதாகக் கூறினார்.
முன்னதாக ஜோகூர் பாருவில், ஃபத்லினா சைடெக், தனது அமைச்சகம் தற்போதைய சவால்களுக்கு ஏற்பவும், மாணவர்களையும் பள்ளி சமூகங்களையும் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்காகவும், அதன் பாதுகாப்பான பள்ளி மேலாண்மை வழிகாட்டுதல்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



