அமைதிப் பேரணி சட்டம் திருத்தப்படும்- மக்களவையில் அன்வார் தகவல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 14-

அமைதிப் பேரணிகளை நடத்தவிரும்பும் தரப்பினருக்கு உதவும் வகையில் 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தில் (சட்டம் 736) திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.பேரணி நடத்துவதற்கான இடத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வது உள்ளிட்ட பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேரணி நடத்த விரும்புவோர் அந்த இடத்தின் உரிமையாளர்களிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் 736இன் 11ஆவது விதி வலியுறுத்துகிறது என்று மக்களவையில் அவர் சொன்னார். அச்சட்டவிதியில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், பேரணி நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே அது குறித்துப் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்கும் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் இது அவசியமாகும் என்று மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின்போது அன்வார் கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முன்அனுமதி பெறாமல் அமைதிப் பேரணியை நடத்துவதற்கு ஏதுவாக 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்று பக்காத்தான் ஹராப்பானின் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் முன்னதாக வினவியிருந்தார்.
மக்களவையின் அடுத்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உத்தேச சட்டத்திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அன்வார் கூறினார்.

லஞ்சஊழலுக்கு எதிரான போராட்டம் பற்றி கருத்துரைத்த தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார், பேரணி நடத்தியதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கைவிடப்படும் என்றார்.சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர்  உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் அண்மையில் நடத்தினர். அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் அன்வார் உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *