மலாக்கா தேர்தலில் பக்காத்தானுடன் இணைந்து செயல்படத் தயாராகவே இருக்கிறோம்! - அம்னோ
- Shan Siva
- 30 Sep, 2026
கோலாலம்பூர், செப் 30: மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன்
இணைந்து செயல்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாரிசான் நேஷனல் இன்னும் தயாராக
இருப்பதாக அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ரஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
பக்காத்தான்
ஹராப்பான் கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாலும், எந்தக் கட்சியுடனும் இணைந்து
செயல்படுவதற்கான கதவுகள் பாரிசான் நேஷனலுக்கு திறந்தே இருப்பதாக அவர் கூறினார்.
பக்காத்தான்
ஹராப்பான் ஒத்துழைக்க விரும்பவில்லை என்றால் அதைக் கட்டாயப்படுத்த முடியாது
என்றும், அது அவர்களின் உரிமை
என்றும் அஸ்ரஃப் வஜ்டி தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத்
தேர்தலுக்காக சாத்தியமான கூட்டணிக் கட்சிகளுடன் பாரிசான் நேஷனல் பேச்சுவார்த்தை
நடத்தி வருவதாகவும், இதுவரை
எந்தவொரு அதிகாரப்பூர்வ கூட்டணியும் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், மாநிலத் தேர்தலுக்கான தேதியையே தேர்தல்
ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், தற்போதைய நிலவரத்தைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என
அஸ்ரஃப் வஜ்டி தெரிவித்தார்.
இதனிடையே, மலாக்கா தேர்தலில் பாரிசான் நேஷனலுடன்
பக்காத்தான் ஹராப்பான் இணைந்து செயல்படாது என்று அமானா கட்சியின் தகவல் தொடர்புப்
பிரிவு இயக்குநர் காலிட் சமட் நேற்று தெரிவித்திருந்தார்.
பாரிசான் நேஷனல்
மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தவிர, வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து செயல்பட பக்காத்தான்
ஹராப்பான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
அரசியல் ஒத்துழைப்பு
தொடர்பான இறுதி முடிவை பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் மன்றமே எடுக்கும் என்று
அதன் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபஹ்மி பட்சில் முன்னதாக
தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

