நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இன்று கலைப்பு! மந்திரி பெசார் அறிவிப்பு
- Shan Siva
- 05 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 5: நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இன்று முதல் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 60 நாட்களுக்குள் 16-வது மாநிலத் தேர்தல் நடத்த வழிவகை செய்யப்படும்.
மாநில சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு மாட்சிமை தங்கிய மன்னர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், சம்மதம் தெரிவித்ததாக மந்திரி பெசார் அமினுதீன் ஹரூன் கூறினார். சட்டமன்றம் இன்று ஜூன் 5 முதல் கலைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
துவாங்கு முஹ்ரிஸை மன்னர் பதவியிலிருந்து நீக்க முயன்ற நான்கு தலைவர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சையை அமினுதீன் கையாண்ட விதம் குறித்து, மாநிலத்தில் உள்ள 14 அம்னோ-பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களும் அவருக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கடந்த மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, பல வாரங்களாக நீடித்த அரசியல் பதற்றத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அம்னோவின் மத்திய தலைமை, மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ தலைவர்கள் இருவருமே சட்டமன்றத்தைக் கலைப்பதே மிகத் தெளிவான தீர்வு என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர்.
இதனிடையே இந்தக் கலைப்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; புதன்கிழமை முதலே இதுபற்றி மக்களுக்குத் தெரிந்திருந்தது. நான் அதை உறுதிப்படுத்துகிறேன் என்று நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமினுதீன் கூறினார்.
நெகிரி செம்பிலானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.
மேலும், பக்காத்தான் ஹராப்பான் தலைவராகவும் இருக்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிம், மாநில சட்டமன்றக் கலைப்பு தொடர்பாக துவாங்கு முஹ்ரிஸைச் சந்தித்தார் என்றும் அவர் கூறினார்.
அனைத்து 36 இடங்களிலும் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் இலக்கு வைத்துள்ளதாகவும், கூட்டணியின் அங்கங்களிடையே இடப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டதாகவும் அமினுதீன் கூறினார்.
2023 நெகிரி செம்பிலான் தேர்தலில் 36 இடங்களில் 17 இடங்களை பக்காத்தான் ஹராப்பான் வென்றதுடன், 14 இடங்களைப் பெற்ற பாரிசான் நேஷனலுடன் இணைந்து மாநில அரசை அமைத்தது. மீதமுள்ள ஐந்து இடங்களை பெரிகாத்தான் நேஷனல் வென்றது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



