நெகிரி செம்பிலான் தேர்தல்: அன்வார் அரசுக்கு எச்சரிக்கை மணியா?!
- Shan Siva
- 06 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 6: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவுகள், மலேசிய அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. இது ஒரு மாநிலத் தேர்தல் மட்டுமல்ல; பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அரசியல் அளவுகோலாகவும் பார்க்கப்படுகிறது.
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியாவின் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சியாசா ஷுக்ரி கூறுகையில், தேசிய அளவிலான அரசியல் கோஷங்களை மட்டும் நம்பி தேர்தலை எதிர்கொள்வது போதாது என்ற பாடத்தை இந்தத் தேர்தல் கற்றுக் கொடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு, மாநில வளர்ச்சி, உள்ளூர் மக்களின் அன்றாட பிரச்சினைகள் போன்றவற்றுக்கே வாக்காளர்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான டாக்டர் ஓங் கியான் மிங், வாக்காளர்களின் மனநிலை வேகமாக மாறி வருகிறது. பழைய அரசியல் விவாதங்களை விட, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் கட்சிகளுக்கே எதிர்காலத்தில் அதிக ஆதரவு கிடைக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அரசியல் விமர்சகர்கள் இந்தத் தேர்தல் முடிவை 2028 பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் கருதுகின்றனர். ஒற்றுமை அரசு மக்களின் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமானால், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதுடன், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, நெகிரி செம்பிலான் தேர்தல் ஒரு மாநில அரசைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைத் தாண்டி, மலேசியாவின் அடுத்த அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய அரசியல் திருப்புமுனையாக தற்போது பார்க்கப்படுகிறது.
மேலும் மாநிலத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசுக்கு எச்சரிக்கை மணி என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக மக்கள் ஆதரவை மீண்டும் பெற ஆளும் கூட்டணி கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. அதே வேளை டி ஏ பி யின் நிலைப்பாடும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



