மலாக்கா தேர்தல் - பாரிசானுடன் கூட்டணிக்குத் தயார்! - PN அறிவிப்பு
- Shan Siva
- 10 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 10: அடுத்த மலாக்கா மாநிலத் தேர்தலுக்காக பாரிசான் நேஷனலுடன்
ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு, பெரிகாத்தான் நேஷனல் தனது இடங்களைப் பரிமாறிக்கொள்ளத்
தயாராக உள்ளது என்று கூட்டணியின் தலைவர் அஹ்மட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.
இரு கூட்டணிகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் இன்னும்
தொடங்கவில்லை என்றும், மலாக்கா தேர்தலுக்கு இன்னும் அறிவிப்பு கூட
வெளியிடப்படவில்லை என்றும் சம்சூரி குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதால், பி.என் தலைமைக்குள்ளாகவோ
அல்லது எங்கள் நண்பர்களுடனோ கலந்துரையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தால், நாங்களும் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
தேர்தலுக்குப் பிறகு ஒரு நிலையான மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான அவர் மேலும் கூறினார்.
நேற்று, பாரிசான் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, கூட்டணிக் கட்சிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் பட்சத்தில், மலாக்கா தேர்தலுக்கான இட ஒதுக்கீடு, இடப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி தயாராக இருப்பதாகக் கூறினார்.
எந்தக் கட்சி வென்ற இடங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை அரசியல் கூட்டாளிகளிடம் சாதாரணமாக ஒப்படைக்கக் கூடாது என்றும் ஜாஹிட்கூறினார்.
கடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் வென்ற 21 இடங்களையும் பிஎன் தக்கவைத்துக் கொள்ளும் என்று அம்னோ தலைவர் முன்னதாகக் கூறியிருந்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



