சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 2026 - ‘சீசன் 5’ – மாபெரும் இசைப்பயணம்!
- Shan Siva
- 17 Sep, 2026
Kelab Artis-Artis Tamil Kalai Kudumbam ஏற்பாட்டில், கிள்ளான் அருளொளி அமைப்பு, பயணம் தொடரும் மற்றும் சிலாங்கூர் செந்தோசா செஜாத்ரா இயக்கம் ஆகிய அமைப்புகளின்
ஒத்துழைப்பில், சிலாங்கூர் மந்திரி
பெசாரின் சிறப்பு அதிகாரியும், செந்தோசா சட்டமன்ற
உறுப்பினருமான YB டாக்டர் குணராஜ் ஆதரவில்
இப்போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான பத்திரிகையாளர்
சந்திப்பு கிள்ளான், செந்தோசாவில் வைபி குணராஜ்
தலைமையில் இன்று நடைபெற்றது. ஐந்தாவது முறையாக நடைபெறும் இந்தப் பிரமாண்ட போட்டி குறித்து
விவரங்களை வைபி குணராஜ் வழங்கினார்.
இளம் பாடகர்களுக்குத்
தங்களது குரல் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளைக்
கண்டறிந்து வளர்ப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார். இசை,
படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை இளம்
தலைமுறையினரிடையே வளர்க்கும் தளமாகவும் இந்தப் போட்டி அமைய உள்ளதாகக் கூறினார்.
போட்டியின்
முதற்கட்ட சுற்றுகள் அக்டோபர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. தொடர்ந்து
அக்டோபர் 18ஆம் தேதி
அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் 20 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதன் இறுதிப்
போட்டி அக்டோபர் 31ஆம் தேதி
புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் முதல் 10 போட்டியாளர்கள் ‘சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 2026’ பட்டத்திற்காக போட்டியிட உள்ளனர்.
போட்டியில்
மொத்தம் 15 ஆயிரம் ரிங்கிட்
மதிப்பிலான பணப் பரிசுகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
வெற்றியாளர்களுக்குத் தங்களது பாடும் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்கும்
சர்வதேச அளவிலான மேடைகளில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்படும்
என அவர் கூறினார்.
இந்தப்
போட்டியில் 9 முதல் 15 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம். பதிவு செய்வதற்கான கடைசி நாள்
அக்டோபர் 8ஆம் தேதியாகும்.
கூகுள் படிவம் மூலம் பதிவு செய்யலாம் அல்லது இ-பேனரில் இடம்பெற்றுள்ள தொடர்பு எண்ணின்
மூலம் போட்டிக் குழுவை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். போட்டி தொடர்பான தகவல்களை Facebook,
TikTok மற்றும் Instagram
சமூக ஊடகங்களிலும் பெறலாம்.
இளம்
திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம்
சிலாங்கூர் மற்றும் மலேசியாவின் கலை, கலாச்சார வளர்ச்சிக்கு இந்தப் போட்டி பங்களிக்கும் என அவர் கூறினார்.
கடந்த காலங்களில்
சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்றவர்களும் பல்வேறு துறைகளில்
சாதித்து வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டு
போட்டியின் சிறந்த இறுதிப் போட்டியாளரான ஹெமித்ரா ரவிச்சந்திரன், அந்தப் பருவத்தின் ஒட்டுமொத்த வெற்றியாளராக
உருவெடுத்ததுடன், பின்னர்
இந்தியாவின் பிரபலமான ஸே ரே கா மா பா பாடல் போட்டியிலும் பங்கேற்று தனது திறமையை
வெளிப்படுத்தினார்.
2021ஆம் ஆண்டு
போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற அபிஷேகபிரியன், பின்னர் RTM இளைஞர் பிரிவு
சாம்பியனாக வெற்றி பெற்று 10 ஆயிரம் ரிங்கிட்
பணப் பரிசைப் பெற்றார். மேலும் பல்வேறு ஜூனியர் நிகழ்ச்சிகளில் இளைய
தொகுப்பாளராகவும் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
அதேபோல் 2021ஆம் ஆண்டு இறுதிப் போட்டியாளரான அபிராமி,
தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து, இசைக்குழுவை உருவாக்கிய மிக இளம் அணியின் குரல்
கலைஞருக்கான Asia Book of Records விருதையும்
பெற்றுள்ளார். அவர் ஜூனியர் தொகுப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி
வருகிறார் என்று வைபி குணராஜ் கூறினார்.
‘சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 2026’ போட்டியின் இறுதிப் போட்டி அக்டோபர் 31ஆம் தேதி புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அடுத்த ‘சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 2026’ பட்டம் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை நேரில் காண பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



