தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 சிறந்த சுற்றுலாத் தலங்களில் பினாங்கும் ஒன்று!

- Muthu Kumar
- 08 Jan, 2025
ஜோர்ஜ்டவுன், ஜன. 8 -
தென் கிழக்கு ஆசியாவில் சுற்றிப் பார்ப்பதற்கான 7 மிகச் சிறந்த இடங்கள் பட்டியலில் பினாங்கும் இடம் பெற்றிருக்கிறது. உலகின் பிரபலமான சுற்றுலா இணைய தளமான லோன்லி பிலேனெட்டில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
பல வகையான பல்சுவை உணவு, கட்டடக் கலை மற்றும் பாரம்பரிய அம்சங்களில் மிளிரும் மலாய், சீனம் மற்றும் தமிழ் இனத்தவர்களின் சிறப்பம்சங்களுடன் வண்ண மயமான கலாச்சாரங்களின் கலவையாக, இம்மாதம் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட லோன்லி பிலேனெட் பினாங்கை படம் பிடித்துக் காட்டுகிறது.
“வெப்பமண்டல தீவு மாநிலமான பினாங்கின் தலைநகர் ஜோர்ஜ்டவுன், தனது பாரம்பரியத்தை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய ஒன்றாக மாற்ற முடிந்தது. “ஆனால், தனது அசல் அம்சங்களை அது இன்னும் பராமரித்து வருகிறது. ஒரு நகரில், நீங்கள் சீன பாரம்பரிய வீடுகள் உட்பட பள்ளிவாசல்கள், இந்து கோவில்கள் மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ கட்டடங்களை இன்னமும் காணலாம்.
“ஜோர்ஜ்டவுனுக்கு வெளியே, பினாங்கு தேசிய பூங்கா, அழகிய கடற்கரைகள் மற்றும் காடு வழியாக நடைப்பயண பாதைகளையும் அம்மாநிலம் கொண்டிருக்கிறது” என்று லோன்லி பிலேனெட் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பினாங்கின் இந்த சாதனைக்காக, மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரக் குழுத் தலைவர் வோங் ஹான் வாய் வாழ்த்து தெரிவித்தார்.“தென் கிழக்கு ஆசியாவில் சுற்றிப் பார்ப்பதற்கான ஏழு மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாக பினாங்கை லோன்லி பிலேனெட் பட்டியலிட்டிருப்பதற்காக, பினாங்கிற்கு வாழ்த்துக் கூறுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *