செவ்வாய் கிரகத்தை மிஞ்சிய வீனஸ் - 45 கி.மீ நீள 'லாவா' சுரங்கப்பாதை!

top-news
FREE WEBSITE AD

விண்வெளியில் பூமியின் 'இரட்டைச் சகோதரி' என்றழைக்கப்படும் வெள்ளிக் கோள் (Venus), பல தசாப்தங்களாகத் தனது அடர்த்தியான மேகக் கூட்டங்களுக்கு பின்னால் பெரிய ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தது.

தற்போது அந்த ரகசியத்தை விஞ்ஞானிகள் உடைத்துள்ளனர். வெள்ளிக் கோளின் தரைக்கடியில் மனிதர்களே வசிக்கக்கூடிய அளவிலான பிரம்மாண்டமான 'லாவா குழாய்' (Lava Tube) இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

1990-களில் நாசா அனுப்பிய 'மெகல்லன்' சேகரித்த பழைய ரேடார் தரவுகளை, இத்தாலியின் ட்ரெண்டோ பல்கலை. விஞ்ஞானிகள் நவீனத் தொழில்நுட்பம் கொண்டு மீண்டும் அலசினர். அப்போதுதான், வெள்ளிக் கோளின் 'நிக்ஸ் மோன்ஸ்' என்ற எரிமலைப் பகுதியில் நிலத்தடியில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. வெள்ளிக் கோளில் கண்டறியப்பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதை, பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ளவற்றை விடவும் மிகப் பெரியது.

இந்தச் சுரங்கப்பாதை சுமார் 1 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இதன் மேலடுக்கு மட்டும் 150 மீட்டர் தடிமனாக உள்ளது. அதாவது, மிகப்பெரிய கால்பந்து மைதானமே இதற்குள் அடங்கிவிடும். இதன் ஒரு பகுதி மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இது நிலத் தடியில் சுமார் 45 கிலோமீட்டர் தூரம் வரை நீண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வெள்ளிக் கோளின் மேற்பரப்பில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க, எதிர்காலத்தில் அங்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இந்த நிலத்தடி குழாய்கள் மிகச்சிறந்த பாதுகாப்பான தங்குமிடங்களாக (Shelters) மாற வாய்ப்புள்ளது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிக் கோளில் எரிமலைகள் குமுறியபோது, அதன் லாவா குழம்பு ஆறாகப் பாய்ந்தது. மேல்பகுதி குளிர்ந்து பாறையாக மாறினாலும், உட்புறத்தில் லாவா தொடர்ந்து பாய்ந்து வெளியேறியது. லாவா முழுவதுமாக வெளியேறிய பிறகு, அங்கு நீண்ட 'ஹாலோ' (Hollow) சுரங்கப்பாதை உருவானது. இதுவே இன்று விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாகும். விரைவில் விண்ணில் பாயக் காத்திருக்கும் நாசாவின் 'வெரிடாஸ்' (VERITAS) மற்றும் ஐரோப்பாவின் 'என்விஷன்' (EnVision) ஆகிய விண்கலங்கள், வெள்ளிக் கோளின் தரைக்கடியில் ஒளிந்துள்ள இதுபோன்ற இன்னும் பல ரகசியங்களைத் தோண்டி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *