தெரெசா கோக் வழக்கு: 3 லட்சம் தயார்! - அக்மால் சாலே
- Shan Siva
- 26 Oct, 2026
புக்கிட் மெர்தாஜாம், அக் 26: டிஏபி மூத்த தலைவர் தெரசா கோக்குக்கு அவதூறு வழக்கில் செலுத்த வேண்டிய 3 லட்சம் ரிங்கிட்டைத் திரட்டிவிட்டதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அவதூறு வழக்கில் தெரசா கோக்குக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், பொதுவான மற்றும் கூடுதல் இழப்பீடாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை வழங்க உத்தரவிட்டது. மேலும், வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரிங்கிட்டை அக்மால் சாலே செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
தம்மிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் திலாப்பியா மீன்களை விற்றதுடன், சொந்தச் சேமிப்பு மற்றும் குடும்பச் சேமிப்பையும் பயன்படுத்தி இந்தத் தொகையைத் திரட்டியதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த நன்கொடைகள் இன்று காலை நிலவரப்படி சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தமது வங்கிக் கணக்குக்கு இனி நன்கொடை அனுப்ப வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட அக்மால் சாலே, அந்தப் பணத்தைத் தமக்காகப் பயன்படுத்தாமல், தேவையுள்ளவர்களுக்கு வழங்கப்போவதாகத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

