பெரிக்காத்தான் நேஷனலின் 'முதலாளி' அல்ல பாஸ்-முகைதீன் சூசகம்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, நவ. 29-

எதிர்க்கட்சிக் கூட்டணியில் பாஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கொண்டிருந்தாலும், பெரிக்காத்தான் நேஷனலின் 'முதலாளி' அதுவல்ல என்று. அதன் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சூசகமாக கூறியிருக்கின்றார்.

பாஸ் கட்சி தனது பலத்தைக் காட்டாததற்காக அதை தாம் பாராட்டுவதாகவும் முகைதீன் கூறியிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலின் தலைவர் ஆகிய பதவிகள் உட்பட அக்கூட்டணியில் இதர உயர்மட்டப் பதவிகளையும் பாஸ் இதர கட்சிகளுக்கு வழங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனலின் தலைவராக முகைதீன் இருக்கும் வேளையில், பெர்சத்து கட்சியின் துணைத் தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார்."எதிர்க்கட்சிக் கூட்டணியில் "பாஸ் மிகப் பெரிய கட்சியாக இருக்கிறது. ஆனால், அது கோரிக்கைகள் எதனையும் முன்வைத்ததில்லை” என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் தெரிவித்தார்.

கூட்டணியில் ஏதாவது ஒரு விவகாரம் எழுந்தால்,அது குறித்து பங்காளிக் கட்சிகளுடன் பாஸ் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்த முகைதீன், பெர்சத்துவுடனான ஒரு வசதியான உறவுக்கு அத்தகைய அணுகுமுறை வழிவகுத்திருப்பதாகக் கூறினார். அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்பது குறித்த ஒரு கேள்விக்கு, அது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படும் என்று முகைதீன் பதிலளித்தார்.

அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளையும் மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதால், பெரிக்காத்தான் கூட்டணியை வழிநடத்த பாஸ் கட்சியே தகுதி பெற்றிருப்பதாக, அதன் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் அண்மையில் கூறியிருந்ததற்கு, முகைதீன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். அதோடு, பெரிக்காத்தானின் தலைவர் பதவியை முகைதீன் தொடர்ந்து வகித்து வருவதற்கு கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் தலைவர் பதவியை வகிக்க பாஸ் கட்சி இதற்கு முன்னர் தங்களுக்கு வாய்ப்பளித்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, தமது அரசியல் அனுபவம் மற்றும் மூத்த அரசியல்வாதி என்பதே அதற்கான காரணம் என்று, பெர்சத்து தலைவருமான முகைதீன் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *