பெர்லிஸ் மந்திரி பெசார் அபுபக்கார் ஹம்சா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்!
- Shan Siva
- 21 Oct, 2026
கோலாலம்பூர், அக் 21: பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்சாவின் பெர்சாத்து கட்சி உறுப்பினர் தகுதி, இரண்டு கட்சித் தேர்தல் தவணைகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த இடைநீக்க நடவடிக்கையை பெர்லிஸ் மாநில பெர்சத்து கட்சித் தலைவர் இசிசாம் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கோலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினருமான அபு பக்காருக்கு இடைநீக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் கடந்த வாரமே அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 14ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், பெர்சாத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ரட்சி மனான் கையெழுத்திட்டுள்ளார்.
அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், கட்சியின் சட்டவிதி 22.5இன் கீழ் அபு பக்காரை இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் சட்டவிதி 9.1.4 மற்றும் உறுப்பினர்களுக்கான நன்னெறி, நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சியில் அபு பக்கார் வகித்த அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன. இடைநீக்கக் காலத்தில் கட்சியின் சார்பாக எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இடைநீக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் கட்சியின் மேல்முறையீட்டுக் குழுவிடம் அவர் முறையீடு செய்யலாம்.
இதற்கிடையே, மந்திரி பெசார் பதவியிலிருந்து அபு பக்கார் விலகுவது தொடர்பில் பெர்சாத்து மத்தியத் தலைமையின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாக இசிசாம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் அபு பக்காரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மர்சித்தா மன்சோரும் பெர்சாத்து கட்சியின் உச்சமன்றப் பொறுப்புகளிலிருந்து விலகியிருந்தனர். எனினும், இருவரும் கட்சி உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர்.
இந்த இடைநீக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்க அபு பக்கார் மறுத்துவிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

