பெர்சாத்துவுக்கு பேராசை! அதனால்தான் கழட்டிவிட்டோம்! - ஹாடி அவாங்
- Shan Siva
- 12 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 12; பெர்சாத்து கட்சி இடங்கள் மற்றும் அதிகாரத்தின் மீது பேராசை கொண்டதால், தனது கட்சி அதனுடனான உறவைத் துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
தனது “மிண்டா பிரசிடென் பாஸ்” (தலைவரின் எண்ணங்கள்) பத்தியில், பெர்சாத்து கட்சியானது இஸ்லாத்தின் அல்லது மலாய்களின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல், முஸ்லிம்கள் மீது அரசியல் அதிகாரத்தைக் கோரி, அதை முஸ்லிம் அல்லாத கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதன் தலைவர்களின் சந்தர்ப்பவாத நடத்தை, அம்னோவை ஒன்றிணைப்பதற்கான உண்மையான போராட்டத்தைத் தடுத்துள்ளது. எனவே, பாஸ் கட்சி தனது கொள்கை ரீதியான போராட்டத்தை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக இருந்தது என்று அவர் கூறினார்.
அரசியல் மாற்றத்தை ஆராய்வதில் பாஸ் கட்சியின் பங்கை பெர்சாத்து கட்சி குறைத்து மதிப்பிடுவதாகவும், பெரிகாத்தான் நேஷனலில் புதிய மலாய்-முஸ்லிம் கட்சிகளின் சேர்க்கையை எதிர்ப்பதன் மூலம் கட்சியை முட்டாளாக்குவதாகவும் ஹாடி குற்றம் சாட்டினார்.
கடந்த பொதுத் தேர்தலின்போதும் , வேட்பாளர்களின் தகுதிகள், தேர்தல் அமைப்புத் திறன்கள் அல்லது அந்தந்தத் தொகுதிகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், பெர்சாத்து கட்சி இடங்களைக் கோரியது என்று ஹாடி சுட்டிக்காட்டினார்.
பெர்சாத்துபின் தலைவர்கள் களத்தில் எங்கும் காணப்படவில்லை. இதனால், தகுதியற்ற மற்றும் தங்களுக்கென சொந்த தேர்தல் அமைப்பு இல்லாத வேட்பாளர்களுக்காக, பாஸ் உறுப்பினர்கள் கட்டாயத் தொழிலாளர்களைப் போல வேலை செய்ய வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
பெர்சாத்துவின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீன் உட்பட, தலைவர்களை அக்கட்சி ஒழுக்கமற்ற முறையில் பதவி நீக்கம் செய்ததையும் ஹாடி சுட்டிக்காட்டினார்.
இந்தத் தலைவர்களின் இழப்பு பெரிகாத்தானின் பலத்தைப் பாதித்து, அதன் கண்ணியத்திற்குச் சேதம் விளைவித்துள்ளது என்று அவர் கூறினார்.
முகைதீன் யாசின் தலைமையிலான கட்சியுடனான உறவைத் துண்டித்துக்கொள்ள பாஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக திங்களன்று அறிவித்த பிறகு, ஹாடி தெரிவித்த முதல் அதிகாரப்பூர்வக் கருத்துக்கள் இவை என்பது குறிப்பிடத்தகத்து!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



