மரியாதை என்பது இருதரப்பிலும் இருக்க வேண்டும் ! பெரிக்காத்தானுக்கு பாஸ் இளைஞர் பிரிவு அறிவுறுத்து
- Shan Siva
- 12 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 12: பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக, அதன் உறுப்புக் கட்சிகளின் நிலைப்பாட்டை பாஸ் மதிக்க வேண்டும் என வலியுறுத்துபவர்களை, பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுடின் கடுமையாக விமர்சித்துள்ளார். மரியாதை என்பது இருதரப்பிலும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் பதிவொன்றில், கூட்டணிக்குள் சில கட்சிகள் முக்கிய விஷயங்களில் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தபோது, அதே மரியாதை விதி நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புதிய PN தலைவர் நியமனம் குறித்து உறுப்புக் கட்சிகளின் முடிவுகளை பாஸ் மதிக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், உங்கள் கட்சித் தலைவர் ஒருவரையே பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, கூட்டணி கூட்டாளர்களின் முடிவுகளை நீங்கள் மதித்தீர்களா? உங்கள் நண்பர்களை அழைத்த நிகழ்ச்சியிலேயே, அவர்கள் முன்னிலையில் இதை அறிவித்தீர்கள். அப்போது அவர்களை மதித்தீர்களா? என்று சரமாரியாகச் சாடினார்.
அஃப்னான் யாரை நேரடியாக குறிப்பிட்டதாக இல்லாவிட்டாலும், பெர்சாத்து இளைஞர் பிரிவு தலைவர் ஹில்மான் இட்ஹாம், PN தலைவர் பதவி குறித்து விவாதிக்க அவசர PN உச்சமன்றக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கின் அழைப்பை நிராகரித்ததையடுத்து, இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.
முகைதீன் யாசின் PN தலைவர் பதவியிலிருந்து விலகியதை உறுதிப்படுத்தவும், புதிய தலைவரை நியமிக்கவும் அந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஹாடி கோரியிருந்தார். முன்பே, அந்தப் பதவிக்கு பாஸ் உரிமை கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெர்லிஸ் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பூர்வ அறிவிப்புகள் (SDs) கையெழுத்து சம்பவத்தையும் அஃப்னான் குறிப்பிட்டார். அந்தச் சம்பவம், கூட்டணி கட்சியொன்றின் மந்திரி பெசாரை (முதல்வர்) பாதித்ததாகவும், கூட்டணி நம்பிக்கையை துரோகம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெர்லிஸில் உங்கள் கட்சித் தலைவர்கள் SDக்களில் கையெழுத்திட்டு, கூட்டணி கட்சியின் மந்திரி பெசாரை வீழ்த்தியபோது, நண்பருக்குத் துரோகம் செய்தபோது, உங்கள் கூட்டாளியின் நிலைப்பாட்டை நீங்கள் மதித்தீர்களா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.
மரியாதை என்பது தன் கட்சியைப் பாதிக்கும் விஷயங்களில் மட்டும் கோரப்படக்கூடாது என அஃப்னான் வலியுறுத்தினார். நண்பரைப் பாதிக்கும் போது மரியாதைக்கு மதிப்பு இல்லை. ஆனால் உங்களைப் பாதிக்கும் போது மட்டும் மரியாதை கேட்கிறீர்கள். அப்படித்தான் நடக்குமா?
சகோதரரே, நண்பர்களிடம் மரியாதை எதிர்பார்த்தால், முதலில் அவர்களை நீங்கள் மதிக்க வேண்டும். அவ்வளவுதான் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



