மருத்துவத் துறையில் தவறான தகவல்களைத் தடுக்க பொறுப்பான ஊடகவியல் அவசியம்! மலேசிய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் சிவநேசன் லெட்சுமணன் வலியுறுத்தல்!
- Shan Siva
- 27 Nov, 2026
பெட்டாலிங் ஜெயா, நவ 27: மலேசியாவில் மருத்துவத் துறை தொடர்பான தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வேகமாகப் பரவி வரும் நிலையில், அவற்றைத் தடுக்க ஊடகவியலாளர்கள் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என மலேசிய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் சிவநேசன் லெட்சுமணன் வலியுறுத்தியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெரட்டன் ஹோட்டலில் மலேசிய மருத்துவர் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், மருத்துவத் துறையில் சரியான நேரத்தில் துல்லியமான தகவல்கள் மக்களைச் சென்றடைவது பல உயிர்களைக் காப்பாற்றும் ஆற்றல் கொண்டது என்றார்.
குறிப்பாக, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற மருத்துவத் தகவல்கள் மற்றும் நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகள் பரவுவது பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதோடு, உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மருத்துவம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்த்து, தகுதியான மருத்துவ நிபுணர்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்வது ஊடகவியலாளர்களின் முக்கியப் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, இளநிலை மருத்துவர்களை மருத்துவச் சேவையில் தக்கவைத்தல், சுகாதாரத் துறைக்கான நிலையான நிதியுதவி, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட மலேசிய சுகாதாரத் துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
மலேசியாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர் சுமார் 41 லட்சம் பேர் உள்ளதாகவும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.4 விழுக்காடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மருத்துவத் துறை தொடர்பான செய்திகளுக்கு நிபுணர்களின் கருத்துகளையும் துல்லியமான விளக்கங்களையும் வழங்க மலேசிய மருத்துவர் சங்கத்தின் கதவுகள் ஊடகவியலாளர்களுக்கு எப்போதும் திறந்திருக்கும் என்றும் டாக்டர் சிவநேசன் லெட்சுமணன் உறுதியளித்தார்.
ஊடகத்துறையினருக்கும் மருத்துவத் துறையினருக்கும் இடையிலான புரிதலையும் நல்லுறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

