உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கே சவால் விடும் 'டெதர்' நிறுவனம்!

top-news
FREE WEBSITE AD

தங்கம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மத்திய வங்கிகளும், பெரும் செல்வந்தர்களும்தான். ஆனால், இப்போது உலக நாடுகளின் மத்திய வங்கிகளையே ஓரம் கட்டும் அளவிற்கு ஒரு தனியார் நிறுவனம் மிரட்டலான வேகத்தில் தங்கத்தைச் குவித்து வருகிறது.அது கிரிப்டோகரன்சி உலகின் ஜாம்பவனான 'டெதர்' (Tether) நிறுவனம் தான் இப்போது உலகளாவிய தங்கச் சந்தையின் புதிய பேசுபொருள்!

கிரிப்டோகரன்சி சந்தையில் முன்னணியில் இருக்கும் 'யு.எஸ்.டி.டி' (USDT) எனும் ஸ்டேபிள்காயினை (Stablecoin) வெளியிடும் நிறுவனம் தான் இந்த டெதர். பொதுவாக டிஜிட்டல் சொத்துக்களில் முதலீடு செய்யும் இந்நிறுவனம், இப்போது நிஜமான தங்கத்தின் மீது தன் பார்வையைத் திருப்பியுள்ளது.

டெதர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாவ்லோ ஆர்டோய்னோ வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த நிதி உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிறுவனம் தற்போது சுமார் 140 டன் தங்கத்தை தன் வசம் வைத்துள்ளது.இதன் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 23 பில்லியன் டாலர்கள்.

இந்நிறுவனம் ஏதோ ஒரு முறை மட்டும் தங்கம் வாங்கிவிட்டு நின்றுவிடவில்லை. மாறாக, ஒவ்வொரு வாரமும் இடைவிடாமல் ஒரு டன் தங்கத்தை தொடர்ந்து வாங்கிச் சேர்த்து வருவதாக பாவ்லோ தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொடுவதற்கு, இதுபோன்ற பெரும் நிறுவனங்களின் 'தங்க வேட்டை'யும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

டெதர் நிறுவனம் வைத்துள்ள தங்க இருப்பு, தற்போது கிரீஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்துள்ள இருப்பை விட அதிகமாகும். இதன் மூலம், உலக அளவில் தங்கம் வைத்திருக்கும் 'டாப் 30' அமைப்புகளில் ஒன்றாக டெதர் உயர்ந்துள்ளது!

இவ்வளவு பெரிய அளவிலான தங்கத்தை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தகவல்களின்படி, இந்தத் தங்கம் அனைத்தும் சுவிட்சர்லாந்தில் உள்ள அதீத பாதுகாப்பு கொண்ட ஒரு பதுங்கு குழியில் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

அமெரிக்க அரசுப் பத்திரங்கள் அல்லது டாலரில் முதலீடு செய்வதை விட, இக்கட்டான பொருளாதாரச் சூழலில் தங்கம் தான் நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பானது என்றும், அதிக லாபம் தரக்கூடியது என்றும் இந்நிறுவனம் நம்புகிறது.டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சி நிறுவனமே, நிஜமான தங்கத்தைத் தேடி ஓடுவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *